நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்தை ஆகாயத்தில் நடத்த பிளானா?
சென்னை: நடிகை ஜனனி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். விளம்பரத்திற்காக படங்களை தேர்வு செய்யாமல், அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்ததும் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.
நடிகை ஜனனி, தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான நடிகைகளில் ஒருவர். தெகிடி, பாலாவின் அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலே அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரசிகர்களுக்கு கமர்ஷியலாக ஹிட் கொடுக்கிறேன் என ஏமாற்றாமல், தரமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களுக்கு திருப்திகரமான படங்களைக் கொடுத்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதாவது விமானி ரோஷன் ஷாம் என்பவரைத் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ரோஷன் ஷாமைப் பொறுத்தவரையில் சென்னையில் பிறந்து வளர்ந்து, துபாயில் விமானியாக செட்டில் ஆகியுள்ளார். ரோஷன் ஷாமின் முழுப்பெயர் சாய் ரோஷன்ஷாம்.

நிச்சயதார்த்தம்: இவரும் நடிகை ஜனனியும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெறவுள்ளதால், இன்று அதாவது ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் டேக் செய்து பகிர்ந்துள்ளார்கள். மொத்தம் ஆறு புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தும் செம அழகாக இருப்பதோடு செம ரொமாண்டிக்காகவும் இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
ஜனனி: நடிகை ஜனனியை பொறுத்தவரையில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் கலந்து கொண்ட இவர் தனது சிறப்பான விளையாட்டாலும் நடவடிக்கைகளாலும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றார். இதனால் அவர் அந்த சீசனில் மூன்றாவது இடம் பெற்றார். நடிகை ஜனனியை பொறுத்தவரையில் சென்னையில் பிறந்து, சென்னையில் படித்து வளர்ந்தவர்.

ஆகாயத்தில்: சினிமா மீது இருந்த ஆசையால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். மேலும் நடிகை ஜனனி கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்னர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றவர். அதே நேரத்தில் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் வேலை செய்யும் சாய் ரோஷன் ஷாமைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதால், ரசிகர்கள் பலரும், பைலட்டுடன் திருமணம் என்றால் ஆகாயத்தில் தான் நடக்கும்' என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். திருமணம் எப்போது என்ற தகவலை அவர்கள் இன்னும் பகிரவில்லை.


Click it and Unblock the Notifications











