16 வயசுலயே உடம்பை பற்றி அநாகரிகமாக கேட்டாங்க.. அதான் சினிமாவுக்கு பயந்துட்டேன்.. மனம் திறந்த நடிகை
சென்னை: சினிமாவில் நடிக்க ஆவலாக உள்ள பெண்களை காஸ்டிங் கவுச் என்ற பெயரில் பாலியலாக அத்துமீறுவது என்பது பல ஆண்டுகளாக திரை உலகில் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட மலையாளத் திரையுலகில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சீண்டல்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி சமர்பித்த அறிக்கை மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
அதன் பின்னர் இந்தியா முழுவதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதேபோல் தமிழ் திரையுலகில் இப்படியான விவாகரங்கள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த கமிட்டி குறித்து ஒரு சத்தத்தையும் காணோம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கையில்,மாடல், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் மற்றும் தெலுங்கு நடிகை மௌனிஷா சௌத்ரி, சினிமா வாய்ப்பு தேடி சென்றபோது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, 16 வயதில் ஒரு முன்னணி இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, நடிப்பு குறித்து பேசாமல் உடல் அமைப்பு குறித்து அநாகரிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய மௌனிஷா, அமெரிக்காவில் சுமார் எட்டு ஆண்டுகள் மாடலாக பணியாற்றியதாக கூறினார். நியூயார்க் ஃபேஷன் வீக் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளில் ரேம்ப் வாக் செய்ததுடன், அமேசான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்ததாக தெரிவித்தார். மாடலிங் என்பது ஒரு தொழில் என்பதால், கதாபாத்திரத்திற்கு தேவையான எந்த வகையான உடையையும் அணிவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
சினிமா ஆசை: சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்ததாக கூறிய மௌனிஷா, கல்லூரியில் படித்தபோதே சில தெலுங்கு பட வாய்ப்புகள் வந்ததாக தெரிவித்தார். ஆனால், தனது தந்தை சினிமாவுக்கு செல்ல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனதாக கூறினார். பின்னர் அமெரிக்கா சென்றாலும், நடிப்பு மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை என்றார். அதன்பிறகு மீண்டும் சில பட வாய்ப்புகள் வந்ததாகவும், விஷ்வக் சென் நடிக்கும் ஒரு பெரிய படத்திலும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறிய அவர், சினிமா மீது இருந்த பயம் காரணமாக அந்த வாய்ப்புகளையும் தவறவிட்டதாக தெரிவித்தார்.
உடலின் அளவு: அப்போது தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். "எனக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். ஒரு பட வாய்ப்பு பற்றி பேசுவதற்காக ஒரு முன்னணி இயக்குநரை சந்திக்க அழைத்துச் சென்றார்கள். நான் நடிக்க விருப்பமா என்று கேட்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், 'உன் உடலின் அளவு என்ன? தொடையின் அளவு என்ன?' என்று அநாகரிகமாக கேட்டார்கள். அந்த ஒரு சம்பவம் சினிமா மீதே எனக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது" என்று மனவேதனையுடன் கூறினார்.
அதிர்ச்சி: அதுமட்டுமில்லாமல், இந்திய சுற்றுலாத்துறை விளம்பரம் என்று கூறி ஒரு ஆடிஷனுக்கு அழைத்ததாகவும், பின்னர் "மினி ஸ்கர்ட் அணிந்து வாருங்கள்" என்று கூறியபோது அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். "இந்திய சுற்றுலாத்துறை விளம்பரத்துக்கும் மினி ஸ்கர்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? நடிக்கிற திறமை இருக்கிறதா என்று கேட்காமல், உடல் அளவுகளை ஏன் கேட்கிறார்கள்?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சினிமா வாய்ப்பு என்ற பெயரில் சிலர் எல்லை மீறி நடந்துகொள்வதால்தான் நீண்ட காலமாக திரைத்துறையை விட்டு விலகியே இருந்ததாக மௌனிஷா கூறினார்.


Click it and Unblock the Notifications