அட சர்ச்சையெல்லாம் இருக்கட்டும்.. அனிமல் படத்தில் நடிக்க என்ன காரணம்?.. மனம் திறந்த நடிகை திரிப்தி
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தில் நடித்ததற்கான காரணத்தை நடிகை திரிப்தி டிம்ரி தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேடட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் கடந்த வருடம் ரிலீஸானது.

கடும் விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
செலிபிரிட்டிகளும் விமர்சனம்: ஆனால் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடகர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த படம்: இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் கடந்த வருடம் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது.இப்போது சந்தீப் ரெட்டி வங்கா தனது அடுத்த பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஸ்பிரிட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
திரிப்தி டிம்ரி: இதற்கிடையே அனிமல் படத்தில் நடிகை திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரது கேரக்டர் கொஞ்சம் கிளாமராகவும்; சர்ச்சையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அதுகுறித்து பேசியிருக்கும் திரிப்தி, "நான் அனிமல் படத்தில் ஒத்துக்கொண்டதற்கு முக்கிய காரணமே ஒரு பாதுகாப்பான கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பது எனக்கு பிடித்தமானது இல்லை. வித்தியாசங்களைத்தான் நான் விரும்புவேன். முக்கியமாக எல்லா சைடுகளையும் ஆராய்ச்சி செய்து பார்க்க விரும்பினேன். அதன் காரணமாகத்தான் அனிமல் படத்துக்கான சோயா கேரக்டரை நான் ஏற்றுக்கொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











