Trisha - பல வருடங்களுக்கு பிறகு மூத்த நடிகருக்கு ஜோடி சேர்ந்த திரிஷா.. குதிரையேற்ற பயிற்சியில் பிஸி
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைகளில் இப்போது விடாமுயற்சி, தக் லைஃப், கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளன. அதேபோல் ஹிந்தியிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகவும் புதிய தகவல் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமானவர் திரிஷா. அதன் பிறகு ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் தலை காண்பித்த அவருக்கு லேசா லேசா படத்தின் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மௌனம் பேசியதே படத்தில் நடித்து அந்தப் படம் ரிலீஸாகிவிட்டது. இதன் காரணமாக மௌனம் பேசியதே படம் அவருடைய முதல் படம் என்று கருதப்படுகிறது. அப்படத்திலேயே திரிஷாவின் அழகு, நடிப்பு ஆகியவை ரசிகர்களையும் கோலிவுட்டினைரையும் கவர்ந்தன.

முன்னணி நடிகை: மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆரம்பத்தில் ரஜினி, கமலுடன் நடிக்காமல் இருந்த அவர் மன்மதன் அம்பு, தூங்கா வனம், பேட்ட ஆகிய படங்களின் மூலம் அதனையும் நிறைவேற்றிக்கொண்டார். பப்ளி நடிகைகளைத்தான் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற பிம்பத்தை திரிஷா அடித்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்கள்: கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகை என்ற இடத்தில் இருக்கிறார் அவர். இடையில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தாலும் 96 மூலம் எழுந்துவிட்ட அவர் இப்போது மீண்டும் லைம் லைட்டில் இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், ராங்கி, லியோ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. படங்கள் அப்படி இப்படியான விமர்சனங்களை பெற்றாலும் திரிஷாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இதன் காரணமாக அவருக்கு மேற்கொண்டு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
பிஸி திரிஷா: அதன்படி அஜித்துடன் விடாமுயற்சி, கமல் ஹாசனுடன் தக் லைஃப் ஆகிய படங்களில் நடிக்கும் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர்; ஹிந்தியிலும் மீண்டும் என்ட்ரி கொடுக்கவிருப்பதாகவும் அந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
குதிரையேற்ற பயிற்சியில் திரிஷா: இந்நிலையில் சிரஞ்சீவியுடன் இணைந்திருக்கும் விஸ்வம்பரா படத்துக்காக திரிஷா குதிரையேற்றம் மற்றும் களரி சண்டை ஆகிய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் திரிஷாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்குமோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இப்படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார் யுவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18 வருடங்களுக்கு பிறகு: இதற்கு முன்னதாக சிரஞ்சீவியுடன் கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் திரிஷா இணைந்து நடித்தார். தற்போது 18 வருடங்களுக்கு பிறகு இரண்டு பேரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நயன் தாரா தற்போது சினிமாவில் நடித்து வந்தாலும் தனது மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டுவருகிறார். இதன் காரணமாக செலக்ட்டிவ்வான படங்களிலேயே நடித்துவருகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதை குறைத்துவருவதால் அந்த வெற்றிடத்தை திரிஷா கெட்டியாக பிடிக்க தொடங்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











