நயன்தாராவைத் தொடர்ந்து ஜெய் ஜோடியாகிறார் த்ரிஷா?
சென்னை: நடிகர் ஜெயின் புதிய படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜாராணி படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருந்தார் ஜெய். அப்படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் மணிமாறன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் ஜெய். அப்படத்தில் நாயகியாக நடிக்க படக்குழு திரிஷாவை அணுகியதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னணி நடிகர்கள்...
சமீபகாலமாக முன்னணி நாயகர்களுடன் மட்டுமே திரிஷா ஜோடி சேர்ந்து வருகிறார். ஆனால், அவரது சக நடிகையான நயன்தாரா ராஜாராணி படத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்திருந்தார்.

சம்மதம்...
இதனால் திரிஷாவும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இயக்குநர் மணிமாறன் தரப்பு திரிஷாவை அணுகிய போது அவர் சாதகமான பதிலைத் தெரிவித்ததாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடர்ன் கேர்ள்...
இப்படத்தில் திரிஷாவுக்கு மாடர்ன் கேர்ள் கதாபாத்திரமாம். கதையும், தனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

படப்பிடிப்பு...
தனது புதியபடத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க மணிமாறன் திட்டமிட்டுள்ளாராம். ஆனால், தற்போது தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வரும் திரிஷாவிற்கு ஆகஸ்ட் மாத கால்ஷீட் புல்லாம்.

கால்ஷீட் பிரச்சினை...
எனவே, தேதி ஒதுக்கீடு செய்வது மட்டும் தான் ஒரே பிரச்சினையாக உள்ளதாம். அது மட்டும் சரியாக அமைந்துவிட்டால் இன்னும் சில தினங்களில் இப்படத்தில் அதிகாரப்பூர்வமாக திரிஷா ஒப்பந்தமாகி விடுவார் எனக் கூறப் படுகிறது.

டைட்டில் பிரச்சினை...
படத்திற்கு முதலில் பொடியன் எனப் பெயரிடப்பட்டது. வழக்கம்போல இந்த டைட்டிலுக்கும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

பொடியன்...
முதலில் பொடியன் டைட்டிலை மணிமாறன்தான் ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்தாராம். ஆனால், அதை அவர் புதுப்பிக்காமல் விட்டதால், தற்போது அது இயக்குனர் தங்கர் பச்சான் கைக்கு மாறி விட்டதாம். இந்த டைட்டிலை பெற தங்கர் பச்சானுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











