Trisha: மன அமைதிக்காக திருப்பதி சென்ற த்ரிஷா..திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் பக்தி மயமான வீடியோ!
திருப்பதி: தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக 'கனவு நாயகி'யாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 'மௌனம் பேசியதே' படத்தில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். சமீபகாலமாக த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதோடு, அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், தனது பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையே மன அமைதி தேடி த்ரிஷா திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் திருப்பதி கோவில் வளாகத்தில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றது தொடங்கி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, அவர்களை நோக்கி கையசைத்தது உள்ளிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜ்ய்யை கடுமையாக விமர்சிக்கும் போது, நடிகை த்ரிஷா குறித்து மிகவும் மோசமாக விமர்சித்தார். இதைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
கண்டன அறிக்கை: இது மட்டும் இல்லாமல் த்ரிஷாவும் தனது வக்கீல் மூலம் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “கண்ணியமற்ற விமர்சனம்: ஊடகங்களில் த்ரிஷா குறித்துப் பரவி வரும் தரம் குறைந்த மற்றும் அருவருப்பான விமர்சனங்கள் தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. மாநிலத்தின் மிக உயரிய அரசியல் பொறுப்பில் உள்ள ஒருவர், இவ்வளவு தரம் தாழ்ந்த மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று த்ரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இது மிகுந்த வருத்தத்திற்குரியது. த்ரிஷா எப்போதும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல; எதிர்காலத்தில் அத்தகைய எண்ணமும் அவருக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக இந்த அறிக்கை மூலம் தெரிவிக்கிறார். கடந்த காலங்களில் அவர் கடைபிடித்ததைப் போலவே, எதிர்காலத்திலும் அரசியலில் எப்போதும் ஒரு நடுநிலையான போக்கையே அவர் பின்பற்றுவார்.

திருப்பதி தரிசனம்: நடிகை த்ரிஷா எப்போதும் தனது கலைப்பணியால் மட்டுமே அடையாளப்பட விரும்புகிறார்; எந்தவிதமான அரசியல் சாயமும் பூசப்படுவதை அவர் விரும்பவில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்குரியப் பொருளாகக் கூடாது என்பது பொதுவான பண்பு. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். த்ரிஷாவுக்கும் அவருக்கும் சற்றும் தொடர்பில்லாத விவகாரங்களுக்கும் இடையே அவரது பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











