Trisha: டாப் நடிகருடன் இரட்டை வேடத்தில் த்ரிஷா.. நடிகர் கொடுத்த செம கிப்ட்!
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சுடுபிடித்துள்ளது. தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வரும் த்ரிஷா, விஸ்வம்பரா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையான நடிகை த்ரிஷா, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடித்த இவர். தெலுங்கிலும் தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்து இருக்கிறார். தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், சிம்பு, தனுஷ், விக்ரம் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

த்ரிஷா: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரொமான்ஸ் அல்டிமேட்டாக இருக்கும். த்ரிஷாவின் சினிமா கேரியரில் இப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும். இதன் பிறகு ஒரு சில ஹிட் படங்களில் நடித்து வந்த த்ரிஷா திடீரென படங்களில் தென்படாமல் போனார். இதையடுத்து, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. குறிப்பாக த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கு படத்தில்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும், கமலுக்கு ஜோடியாக தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ள நிலையில், தெலுங்கு இயக்குநர் வசிஷ்ட மல்லிடி இயக்கத்தில் உருவாக உள்ள விஸ்வம்பரா படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பரிசு கொடுத்த சிரஞ்சீவி: சிரஞ்சீவியின் 156வது படமான விஸ்வம்பரா திரைப்படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வர உள்ளது. 2006ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் படத்துக்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து த்ரிஷா சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடந்து வரும் நிலையில், 9 ம் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டார். அவருக்கு சிரஞ்சீவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மக் ஒன்றை பரிசளித்துள்ளார். நமக்கு தேவைப்படும் டெம்பரேச்சரை இந்த மக் அதுவாகவே கட்டுப்படுத்தும். இந்த மக்கின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கும் த்ரிஷா. இந்த பரிசு தனக்கு பிடித்து இருப்பதாகவும், இந்த பரிசுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடத்தில் த்ரிஷா: விஸ்வாம்பரா படத்தில் சிரஞ்சீவி, த்ரிஷாவுடன் சுரபி, இஷா சாவ்லா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்கிறார். 2025, ஜனவரி 10 ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











