என்றென்றும் செல்வி.. த்ரிஷா போல திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் டாப் 5 ஃபேவரைட் ஹீரோயின்கள்!
சென்னை: நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ், வரலட்சுமி சரத்குமார் எல்லாம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இன்னமும் நடிகை த்ரிஷா 41 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். பாலிவுட்டில் அதிக வயதான நடிகர் சல்மான் கான் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உள்ளார். அதே போல கோலிவுட்டில் நடிகர்கள் சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா போல சில முரட்டு சிங்கிள் நடிகர்களும் உள்ளனர்.
பொதுவாக நடிகைகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்க முக்கிய காரணமாக லவ் பிரேக்கப், திருமணமே கடைசி நேரத்தில் கைவிடப்பட்ட சூழல், சிலருக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்காமல் போவது, சிலருக்கு திருமண வாழ்க்கையில் இஷ்டமே இல்லாமல் கடைசி வரை நடிகையாகவே தொடரலாம் என ஏகப்பட்ட தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும்.

இந்நிலையில், த்ரிஷா போல திருமணம் செய்யாமல் இதுவரை செல்வியாகவே வாழ்ந்து வரும் சில டாப் ஹீரோயின்கள் பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
கல்யாணம் கட்டிக்காத த்ரிஷா: சியான் விக்ரம் உடன் இணைந்து "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்றும் "இதுதானா.. இவன்தானா" என பாடி நடித்த த்ரிஷாவுக்கும் தொழில் அதிபர் அருண் மணியன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடைசியில் ஒரு சில காரணங்களால் அந்த திருமணம் அப்படியே தடைப்பட்டு நின்று போனது. அதன் பின்னர் நடிகை த்ரிஷா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து மீண்டும் தனது முதலிடத்தை சினிமாவில் பிடித்துள்ளார். இதற்கு மேல் த்ரிஷா திருமணம் செய்வாரா? மாட்டாரா? என்பது அவர் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவு.

அனுஷ்கா: 43 வயதாகும் நடிகை அனுஷ்காவும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார். நடிகர் பிரபாஸ் உடன் அவருக்கு திருமணம் நடைபெறப் போவதாக பாகுபலி படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், இன்னமும் இருவரும் திருமணமே செய்துக்கொள்ளாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடை அதிகரித்த காரணத்தால் பெரிய பட வாய்ப்புகள் மிஸ் ஆன நிலையில், தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி மாஸ் காட்டி வருகிறார் அனுஷ்கா.

நக்மா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில் நடிகை நக்மா கூட திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். 50 வயதை கடந்த நிலையில், இன்னமும் நடிகை நக்மா திருமணம் செய்யவில்லை. நடிகை ஜோதிகாவின் மகள் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. சில நடிகர்களுடனும் விளையாட்டு வீரர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நக்மா சில காரணங்களுக்காக திருமணமே செய்துக் கொள்ளவில்லை.

மும்தாஜ்: 44 வயதாகும் நடிகை மும்தாஜும் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஏகப்பட்ட இளைஞர்களை "மல மல மருதமலை" பாடல் மூலம் தூங்கவிடாமல் செய்த கனவுக்கன்னியாக இருந்து வந்த கவர்ச்சி நடிகை மும்தாஜ் திடீரென இஸ்லாமிய மார்கத்தில் ஆன்மிகத்தை நாடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

ஸ்ருதிஹாசன்: கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனுக்கு 38 வயதாகிறது. 2 முறை தனது பாய் ஃபிரெண்டுகளை தந்தையிடமே அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன் சீக்கிரமே தன்னை தாத்தா ஆக்குவார் என எதிர்பார்த்த கமல்ஹாசனுக்கு இன்னமும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசனுக்கும் 33 வயதாகும் நிலையில், இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பாலிவுட் நடிகை தபுவும் 53 வயதை கடந்த நிலையில், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். மேலும், சில நடிகைகளும் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சினிமாவை மட்டுமே நேசித்து காதலிக்க நேரமில்லை ரவி மோகன் போல ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











