'வருமானம் குறைஞ்சிடுச்சோ'... தங்கக் கோயிலில் 'சொர்ணலட்சுமி'க்கு சிறப்புப் பூஜை செய்த த்ரிஷா!
வேலூர்: பட வாய்ப்பு குறைந்து, வருமானம் குறைந்துவிட்டதை நிவர்த்தி செய்ய, வேலூர் தங்க கோயிலில் உள்ள சொர்ணலட்சுமி சிலைக்கு சிறப்புப் பூஜை செய்தார் நடிகை த்ரிஷா.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ளது பிரபலமான தங்க கோவில். சமீபத்தில் உருவாகியிருந்த இந்த கோயிலுக்கு ஏகப்பட்ட விஐபி விசிட்டர்கள் பக்தர்களாக உள்ளனர்.

இந்தக் கோயிலுக்கு நடிகை த்ரிஷா நேற்று திடீரென வந்தார். அவருடன் தாயார் உமாகிருஷ்ணன் அவரது சித்தி ஆகியோரும் வந்தனர்.
த்ரிஷாவை்க கண்டதும் வழக்கம் போல கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாமியை மறந்து, அவரை மொய்க்க ஆரம்பித்தனர்.
த்ரிஷா வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவரை வி.ஐ.பி. வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு லட்சுமி நாராயணி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்தக் கோயிலை உருவாக்கியவர் 90களின் இறுதியில் இளம் சாமியாராக இருந்த சதீஷ். இப்போது நாராயணி அம்மா என அழைக்கப்படுபவர் இந்த சதீஷ் சாமியார்தான்.
கோவிலில் 70 கிலோ தங்கத்தினால் சொர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையை கோயில் நிர்வாகிகள் பரப்பி வைத்துள்ளனர்.
இந்த சொர்ண லட்சுமி சிலைக்கு நடிகை த்ரிஷாவும் தனது கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டார். தொடர்ந்து அவரது தாயார் உமாகிருஷ்ணன் அபிஷேகம் செய்தார்.
கோவில் சார்பில் த்ரிஷாவுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலை ஒரு முறை அங்குள்ள வாகனம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்பினார். அவர் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே ஓடிச் சென்று பரவசப்பட்டனர் பக்தர்கள்!


Click it and Unblock the Notifications











