அன்று நயன்தாராவுக்காக செய்தார், இப்போ சமந்தாவுக்காக செஞ்சிருக்கார் அனிருத்
யூ டர்ன் திரைப்படத்தின் ப்ரொமோ பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்
சென்னை: யூ டர்ன் படத்தின் ப்ரொமோ பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதை விட அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் பெரிய வேலையாக உள்ளது. எத்தனையோ புதிய யுக்திகளைக் கையாண்டாலும், அதிகமான படங்கள் ரிலீஸ் ஆனாலும், எத்தனைப் படங்கள் மக்களைச் சென்றடைந்து வெற்றி பெறுகிறது என்பது கேள்வியே.

அந்த வகையில், இயக்குர்கள் இப்போது எடுத்திருக்கும் யுக்திதான் ப்ரொமோ பாடல் வெளியிடுவது. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ப்ரொமோ பாடல்களை சரியான இடைவெளியில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தனர். மேலும், கதையும் ரசிக்கும்படியாக இருந்ததால் படம் வெற்றிபெற்றது.
கோலமாவு கோகிலா திரைப்படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள சமந்தாவின் யூ டர்ன் படத்திற்கும் அனிருத் ப்ரொமோ பாடல் வெளியிடப் போவதாக சொல்லியிருந்தார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான யூ டர்ன் திரைப்படத்தின் கர்மா தீம் ப்ரொமோ பாடலை வெளியிட்டுள்ளார்.
சமந்தா கைகள் கட்டப்பட்டுள்ளது, அனிருத் நடந்து கொண்டே.. திசை திரும்பினால் என பாடுவது போல் ஆரம்பிக்கும் பாடல் பிறகு வேகம் எடுக்கிறது. பிறகு கட்டவிழ்த்து சுதந்திரமாக சமந்தா நடனம் ஆடுவது போல் அமைந்துள்ளது.
யூ டர்ன் திரைப்படம் பவன்குமார் இயக்கத்தில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











