கிளாமர் ட்ரெஸ்.. பிடிக்கவே இல்லை.. ஊர்வசிக்கு கமல் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?
சென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்ற கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கே வந்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தரமான கம்பேக்கை கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த இந்தியன் 2, தக் லைஃப் ஆகிய படங்கள் ட்ரோல்களையே சந்தித்தன. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஊர்வசி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடையே வைரலாகியிருக்கிறது.
சினிமாவில் மும்முரமாக இருந்த கமல்ஹாசன் திடீரென அரசியலுக்கு சென்றார். சினிமாவில் சாதித்தது போல் அங்கேயும் சாதிக்கலாம் என்று கணக்கு போட்டிருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்தார் கமல். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் அந்தப் படம் வந்த காலகட்டத்தில் வேற்று மொழி படங்கள்தான் இங்கே ஹிட்டடித்து கொண்டிருந்தன.

படுத்துவிட்ட வண்டி: இந்த வண்டி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் வீரியமாக ஓடும் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். அவரும் விக்ரம் படம் கொடுத்த வெற்றி உற்சாகத்தில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்க்ளையும் சந்தித்தன என்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய வேதனையான விஷயம்தான்.
அடுத்த படம்: இரண்டு பெரிய சீனியர் இயக்குநர்களை நம்பி இப்படி மோசம் போய்விட்டோமே என நொந்திருப்பார் போல; உடனடியாக இளம் இயக்குநர்களுடன் கூட்டணி வைக்க ஆரம்பித்தார். முதலில் வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி விலகினார். இப்போது அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் கமல் பற்றி நடிகை ஊர்வசி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது
ஊர்வசி பேட்டி: அவர் பேசுகையில், "லவ் சீன், க்ளோஸாக இருக்கக்கூடிய காட்சிகளில் எல்லாம் நீங்கள் ரொம்பவே கூச்சப்படுகிறீர்கள் என கமல் என்னிடம் சொன்னார். டாப் ஹீரோவுடன் நடிக்கும்போது ஹீரோயின் கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற விதி அப்போது இருந்தது. ஆனால் அது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே பாதித்துக்கொண்டிருந்தது. பிடிக்கவே இல்லை எனக்கு. அந்த காஸ்ட்யூம் எல்லாம் எனக்கு வசதியாக இல்லை. அப்போது கமல் என்னிடம், 'மலையாளத்தில் உங்களுக்கு நல்ல கேரக்டர்கள் வந்தால் கமிட் ஆகுங்கள்.
அதனால்தான்: அவர் பேச்சை கேட்டுத்தான் மலையாளத்தில் கமிட் ஆக தொடங்கினேன். தெலுங்கு மொழிக்கு சென்றாலும் எல்லா இயக்குநர்களுடனும் சண்டைதான். அவர்கள் கொடுக்கும் ஒரு காஸ்ட்யூம் எல்லாம் எனக்கு செட்டே ஆகவில்லை" என்றார். முன்னதாக கமலுடன் அந்த ஒரு நிமிடம், மைக்கேல் மதன காம ராஜன், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் ஊர்வசி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரும் ஜெயராமும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
