அந்த விவகாரம் தெரியாது.. பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துகொண்டார்.. வணங்கான் ஹீரோயின் ஓபன் டாக்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நாயகி ரோஷினி பிரகாஷ் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
சறுக்கிய பாலா: பாலாவின் திரை வாழ்க்கை இப்போது ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னையிலேயே இருக்கிறது. தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவருக்கு; இன்னொரு இடியாக இறங்கியது என்றால் வர்மா திரைப்படம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான அதில்தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பும், விக்ரமும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து அந்தப் படத்தை பாலா தனியாக ரிலீஸ் செய்தார். ஆனால் படம் கவரவில்லை.
வணங்கான்: அவர் இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் சூர்யா கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் விலகிவிட்டார். இதனையடுத்து அருண் விஜய் நடித்தார். மேலும் முதலில் ஹீரோயினாக பிரேமலு புகழ் மமிதா பைஜு கமிட்டானார். அவரும் படத்திலிருந்து விலகியதை அடுத்து இப்போது ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். படமானது விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
ரோஷினி பேட்டி: இந்நிலையில் ரோஷினி பிரகாஷ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பாலா - மமிதா பைஜு விவகாரம் எனக்கு தெரியாது. ஆனால் வணங்கான் ஷூட்டிங் எனக்கு நல்லபடியாக அமைந்தது. என்னை ரொம்பவே வசதியாக ஷூட்டிங்கில் உணர வைத்தார். மேலும் ஒரு ஃப்ரெண்டை போலத்தான் என்னுடன் பழகினார். ஷூட்டிங்கிற்கு நான் வந்தவுடன் ஸ்க்ரிப்ட்டை என்னிடம் கொடுத்துவிடுவார். அது எனக்கு புரிவதற்கு வசதியாக தங்கிலீஷில் இருக்கும்.
நேரடியாக கேட்பேன்: ஏதேனும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தால் நேரடியாக அவரிடமே பேசுவேன். கேட்பேன். அப்போது அவர் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குவார். எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். நடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் அதற்கான நேரத்தையும் கொடுப்பார். நடிப்பில் வித்தியாசம் காட்டவா என்று கேட்டால், ஒரு முறை செய்து காட்டு என்று சொல்வார். அவருக்கு அது பிடித்திருந்தால் ஓகே என்பார். பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் அவர்களது உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவருடன் பணியாற்றியது மாஸ்டர் கிளாஸ்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











