அதை முதலில் காண்பியுங்கள்.. பிறகு என் ட்ரெஸ்ஸை பற்றி பேசுங்க.. விளாசிய வனிதாவின் மகள் ஜோவிகா
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாக்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் மிஸஸ்&மிஸ்டர் என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்க; வனிதாவின் மகள் ஜோவிகாதான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் ஜோவிகா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். அவர்களில் நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர்தான் வனிதா. தந்தை வழியில் சினிமாவில் அறிமுகமான அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; அவரது அப்பா மாதிரி பெரிய ஸ்டாராக வர முடியவில்லை. இருப்பினும் அவர் சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று முயன்றுகொண்டுதான் இருந்தார்.
வனிதா செய்துகொண்ட திருமணங்கள்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் முதலில் அவர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனை பெற்றார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இதனால் வனிதாவுக்கும் விஜயகுமார் மற்றும் குடும்பத்துக்கும் இடையே பிரச்னை உருவாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகாஷை பிரிந்த அவர் அடுத்ததாக தொழிலதிபரை திருமணம் செய்தார். அந்தத் திருமணம் பாதியில் முடிந்து ராபர் மாஸ்டருடன் பழகி; அவரையும் பிரிந்து கடைசியாக பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிக்பாஸ் வனிதா: இதற்கிடையே ஒருபக்கம் திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அதிலும் தனது அடாவடி செயல்களால் கவனம் ஈர்த்த அவர் நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறினார். அங்கிருந்து வந்த பிறகு அநீதி படத்தில் நடித்த அவர் அடுத்ததாக அந்தகன் திரைப்படத்தில் நடித்தார். இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கும் அவர் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mrs&Mr திரைப்படம்: அதன்படி அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் வனிதா இயக்கியிருக்கும் படம் மிஸஸ்&மிஸ்டர். அதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியான ஒரு போஸ்டரை வைத்து அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சுக்கள் எழ ஆரம்பித்துவிட்டன. அந்தப் படமானது மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.
சர்ச்சையான உடை விவகாரம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஒரு விழாவில் வனிதாவும், ஜோவிகாவும் கலந்துகொண்டார்கள். அப்போது ஜோவிகா கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார். அப்போதிருந்து பலரும் அவரை விமர்சித்துவருகிறார்கள். தாயுடன் வரும்போது இப்படியா வருவது என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜோவிகா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜோவிகாவின் பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "நான் ஜீன்ஸ் டிஷர்ட் போட்டால் பாரம்பரியான உடையை அணியவில்லை என்பார்கள். பாவாடை சட்டை போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்தால் இந்தக் காலத்துக்கு தகுந்தபடி ட்ரெஸ் போடவில்லை என சொல்வார்கள்.உங்களுடைய பாரம்பரியம்தான் என்ன?.. உங்கள் பாரம்பரியத்தை முதலில் காண்பியுங்கள் அப்புறம் பேசுங்கள்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











