சாலை விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!
திருவனந்தபுரம்: நடிகர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் நாயகியாக நடித்திருந்த அருந்ததி நாயர், சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரின் தோழி கோபி அனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்த அருந்ததி நாயர், தமிழ் பொங்கியெழு மனோகரா, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய படத்தில் நடித்தார். இதையடுத்து, விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான 'சைத்தான்'படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழில் எந்த படவாய்ப்பும் வராததால் மீண்டும் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் கடந்த வாரம் தியேட்டரில் வெளியான யாவரும் வல்லவரே திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், தேவதர்ஷினி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்
விபத்தில் சிக்கினார்: இந்நிலையில், நடிகை அருந்ததி கோவளம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி செய்யுங்கள்: நடிகை அருந்ததி நாயகர் விபத்தில் சிக்கியது குறித்து, அவரின் தோழியும், சீரியல் நடிகையுமான கோபிகா அனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் தோழி அருந்ததி நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாள். அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் தினசரி மருத்துவமனைச் செலவுகள் மிக அதிகமாகிறது. எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்து வருகிறோம்.

ஆனால், மருத்துவ செலவு அதிகமாவதால், நீங்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை செய்தால், அது அவளுடைய குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவிய நிலையில், அவர் உடல் நலம் தேறிவரவேண்டும் என அவரது ரசிகர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











