twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை விஜயநிர்மலாவுக்கு பத்மஸ்ரீ விருது… ‘மா’ அமைப்பு பரிந்துரை!

    By Mayura Akilan
    |

    பழம்பெறும் நடிகையும், 42 படங்களை இயக்கிய நடிகையுமான விஜயநிர்மலாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கவேண்டும் என்று தெலுங்கு திரை உலகின் மா அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

    பணமா பாசமா' படத்தைப் பார்த்தவர்கள், 'எலந்தபழம்' பாடலையும், அதில் நடனமாடிய நடிகை விஜய நிர்மலாவையும் மறந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் ஆந்திரப் பட உலகின் மிகப்புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்ததுடன், 42 படங்களை இயக்கினார்.

    Vijaya Nirmala definitely deserves Padma Shri !

    விஜய நிர்மலாவின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிறந்த ஆண்டு 1943.

    விஜய நிர்மலா 7 வயது சிறுமியாக இருக்கும்போது, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஒரு படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    விஜய நிர்மலாவுக்கு 15 வயதாகியபோது, அவருடைய புகைப்பட ஆல்பத்தை குடும்ப நண்பர் ஒருவர் பார்த்தார். 'இவ்வளவு களையான முகம் கொண்ட விஜய நிர்மலா, சினிமா படங்களில் கதாநாயகியாக நடிக்கலாம். அதற்கு நானே முயற்சி செய்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆல்பத்தை வாங்கிச் சென்றார்.

    அப்போது, 'பார்கவி நிலையம்' என்ற மலையாளப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த பட அதிபரிடம் விஜய நிர்மலாவின் பட ஆல்பம் போயிற்று. அவர் அதைப் பார்த்துவிட்டு, படத்தின் டைரக்டரும், ஒளிப்பதிவாளருமான வின்சென்ட்டிடம் கொடுத்தார்.

    'இந்தப் பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருக்கிறது. கேமராவுக்கு ஏற்ற முகம். நம் படத்திலேயே கதாநாயகியாக நடிக்க வைக்கலாம்' என்று வின்சென்ட் கூற, 'பார்கவி நிலைய'த்தின் கதாநாயகியானார், நிர்மலா.

    ஏற்கனவே தெலுங்கில் வெளியான 'சவுகார்' என்ற படத்தை 'எங்க வீட்டு பெண்' என்ற பெயரில் தமிழில் தயாரிக்க விஜயா புரொடக்ஷன்சார் ஏற்பாடு செய்து வந்தனர். கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று ஆலோசித்து வந்த அவர்களுக்கு, விஜய நிர்மலா பற்றித் தெரிந்தது. அந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்க, விஜய நிர்மலா ஒப்பந்தம் ஆனார்.

    இவ்வாறு, 'எங்க வீட்டுப்பெண்' படத்தின் மூலமாக, தமிழ்ப்பட உலகுக்கு விஜய நிர்மலா அறிமுகமானார்.

    எலந்தபழம்... எலந்த பழம்...

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாரான 'பணமா பாசமா' படத்தில், விஜய நிர்மலா நடித்தார். படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 'எலந்த பழம்' பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்க, விஜய நிர்மலா அந்த ஒரே பாடல் காட்சி மூலம் பெரும் புகழ் பெற்றார்.

    எம்.ஜி.ஆரின் தங்கை

    'என் அண்ணன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாக நடித்தார். பிறகு, 'சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்து, நகைச்சுவை நடிப்பும் தனக்கு நன்றாக வரும் என்பதை நிரூபித்தார்.

    தெலுங்கில் பிரபலம்

    தமிழ்ப்படங்களில் நடித்து வந்தபோதே, தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்த படங்கள் அமோக வெற்றி பெற்றன. எனவே, தெலுங்குப் படங்களில் அதிகம் நடிக்கலானார்.

    நடிகர் கிருஷ்ணா உடன் காதல்

    பல படங்களில், பிரபல நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். விஜய நிர்மலா - கிருஷ்ணா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

    42 படங்களை இயக்கம்

    இந்தக் காலக்கட்டத்தில், டைரக்ஷனிலும் விஜய நிர்மலா ஈடுபட்டார். அவர் டைரக்ட் செய்த படங்கள் பெரும் வெற்றி பெறவே, டைரக்ஷனில் தீவிரமாக இறங்கினார். மொத்தம் 42 படங்களை டைரக்ட் செய்தார். இது, உலக சாதனை. உலகத்திலேயே, அதிகப் படங்களை டைரக்ட் செய்த பெண் இயக்குனர் இவர்தான்!

    பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை

    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 275 படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில், படத்தயாரிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இடம் பெற்றவர், விஜய நிர்மலா. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ‘மா' அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

    English summary
    Movie Artists Association (MAA) gathered yesterday (25-9-2014) in Vizag to discuss the impending issues which are related to movies. The team of MAA generally decided that they would recommend veteran actress Vijaya Nirmala for Padma Shri Award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X