காயங்களையும் தையல் போட்ட இடத்தையும் காட்டி வீடியோ போட்ட யாஷிகா ஆனந்த்.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கி உள்ளார்.
தனது தோழியை இழந்த மன வருத்தம் மற்றும் உடல் முழுக்க காயங்களும் தையல்களும் என ஆறாத ரணங்களுடன் இருக்கும் யாஷிகா போட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மீண்டும் பழையபடி யாஷிகா திரும்பி வர வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த்
கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளர் கெட்டப்பில் நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 2
பிக் பாஸ் சீசன் 2வில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போட்ட கவர்ச்சி ஆட்டமெல்லாம் இப்போ இல்லையே என பிக் பாஸ் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாகினர்.

26 லட்சம் ரசிகர்கள்
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் ஃபேஷன் உடைகளை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.6 மில்லியன் ரசிகர்கள் அதாவது 26 லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

கார் விபத்து
கடந்த ஜூலை 24ம் தேதி யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து இரவு டின்னர் முடித்து விட்டு நண்பர்களுடன் மகாபாலிபுரம் அருகே வந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக பரிதாபமாக அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஆறாத ரணம்
தோழி வள்ளி செட்டி பாவனி உயிரிழந்த சோகம் மற்றும் தனது காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் கடந்த 3 மாதங்களாக ஆறாத ரணத்துடனே இருந்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தார் யாஷிகா ஆனந்த்.
தையல் போட்ட இடம்
இந்நிலையில், தற்போது இன்னொரு இன்ஸ்டாகிராம் வீடியோவை நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார். அதில், தனது காலில் போடப்பட்ட தையல்களையும் யாஷிகா ஆனந்த் காட்டியுள்ளார். அத்தனை தையல்களுடன் இருக்கும் யாஷிகா ஆனந்த் சீக்கிரமே பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

முன்பை போலவே நேசிப்பீர்களா
என் வலிகளையும், வீழ்ச்சியையும் பார்த்த பின்னரும், நான் வலிமையானவளாக இல்லை என்பதை தெரிந்த பின்னரும் முன்பை போலவே என்னை நேசிப்பீர்களா? என இந்த வீடியோவை போட்டு நடிகை யாஷிகா ஆனந்த் கேட்க உருகிப் போன ரசிகர்கள் எப்போதுமே பக்க பலமாக இருப்போம் யாஷிகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாவனா பிரார்த்தனை
விஜய் டிவி பிரபலமான விஜே ரக்ஷன் யாஷிகாவின் வீடியோவுக்கு ஃபயர் எமோஜியை போட்டுள்ளார். பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் சீக்கிரம் குணமாகி முன்பை விட பல மடங்கு பலமானவளாக நீ வருவ யாஷிகா கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என கமெண்ட் போட்டு யாஷிகாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











