காதலில் சிக்கிய இளம் நடிகைகள்... விரைவில் டும் டும்...
நடிகைகள் காதல் என்றாலே அது கிசுகிசுவாக பரவி பின்னர் ரகசிய திருமணமாக முடிந்து பின்னர்தான் அறிவிக்கப்படும். ஆனால் இன்றைக்கு பிஸியாக இருக்கும் நடிகைகளே காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டு அதன் பின்னரும் நடிப்பை தொடர்கின்றனர்.
வடமாநிலங்களில் ஐஸ்வர்யா ராய், கஜோல் வரிசையில் தென்னிந்திய நடிகைகளும் திருமணத்திற்குப் பின்னர் நடிக்க தொடங்கியுள்ளனர். இப்போதைய இளம் நடிகைகளும் காதலில் விழுந்து கல்யாணக் கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் புதிதாக காதலில் சிக்கிய நடிகைகள் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதில் எத்தனைபேர் திருமணத்திற்குப் பின்னர் நடிப்பார்களோ தெரியவில்லை.

சமந்தாவின் குழப்பம்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தாலும் நான் ஈ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களிடையே அதிக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை அளித்தது. சித்தார்த்துடன் காதல் என்ற செய்தி திடீரென்று பரவியது. அப்புறம் நாங்கள் நண்பர்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட் விடுகின்றனர்.

பரிகார பூஜை
சமந்தாவும், சித்தார்த்தும் இணைந்து கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

பப்ளி ஹன்சிகா
இன்றைக்கு இளம் ரசிகர்களின் கனவுக்கன்னி ஹன்சிகாதான். சிம்பு காதலித்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஹன்சிகாவை மருமகளாக்கிக் கொள்வேன் என்று டி. ராஜேந்தர் பகிரங்கமாக அறிவித்தார். நான் சிம்புவை காதலிக்கவில்லை என்று கூறிய ஹன்சிகா, திடீரென்று தன்னுடைய காதலை டுவிட்டரில் ஒத்துக் கொண்டார்.

எப்போ கல்யாணம்
இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து விட்ட நிலையில் சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார். ஆனால் ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். இப்போதுதான் கைநிறைய படங்கள் புக் ஆகி இருக்கிறது. திடீரென்று திருமணம் செய்து கொள்ளவேண்டுமா? என்று யோசிக்கிறாராம் ஹன்சிகா. சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரோ, மகளின் திருமணத்தை முடித்துவிட்டு அடுத்து மகனுக்குத்தான் என்கிறார் எது எப்படியோ சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க என்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கும், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரை மணப்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை குறைப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே அவர் கமல், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சமீபத்தில் புறக்கணித்து விட்டார். தமிழில் கூட தற்போது பிரியாணி, விஜய் உடன் ஜில்லா ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாபால் ரகசிய காதல்
அமலாபாலும், இயக்குநர் ஏ.எல். விஜய்யும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகி வருகின்றன. தங்களின் காதல் பற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் காதல் ரகசியமாக வளர்ந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

லட்சுமிராய்
தொழிலதிபர் ஒருவரை லட்சுமி ராய் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அவர், நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போதைக்கு சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











