'பாண்ட்' படம்- கோபத்தில் சிலி!

லத்தீன் அமெரிக்க நாடுகளான சிலிக்கும், பொலிவியாவுக்கும் எப்போதுமே ஆகாது. எலியும், பூணையுமாக இருவரும் எப்போதும் சிலிர்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த சண்டை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1879ம் ஆண்டு உருவான பகை இது.
அந்த ஆண்டு, ஆன்டபெகஸ்டா நகரை பொலிவியாவிடமிருந்து சிலி கைப்பற்றியது. அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே பகை நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்போது ஜேம்ஸ் பாண்ட் படத்தால் இந்த சண்டை புது ரூபம் எடுத்துள்ளது.
டேணியல் கிரேக் நடித்துள்ள குவான்டம் ஆப் சொலஸ் என்கிற புதிய ஜேம்ஸ் படம் தயாராகி வருகிறது. இதில் ஜெம்மா ஆர்தர்டன், ஓல்கா குரிலென்கோவ் என பாண்டுக்கு இரு ஜோடிகள்.
இப்படத்தில், ஜேம்ஸ் பாண்ட் பொலிவியாவுக்குப் போவது போல சில காட்சிகள் இடம் பெறுகின்றன. இந்தக் காட்சிகளை சிலியில் செட் போட்டு எடுத்து வருகின்றனர்.
காட்சிப்படி, பொலிவிய தீவிரவாதிகளை, சிலி படையினர் விரட்டியடிப்பது போன்ற காட்சியைப் படம் பிடித்தனர். இதற்காக
போடப்பட்ட செட்டில் பொலிவிய நாட்டு கொடிகள் பட்டொளி வீசிப் பறப்பது போல வைக்கப்பட்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்ட சிலி நாட்டு ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டார்கள். எந்த நாட்டில் வந்து, எந்த நாட்டுக் கொடியைப் பறக்க விடுவது என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர் சிலி ரசிகர்கள். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு பெரும் திரளாக திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் இதுகுறித்துக் கூறுகையில், சிலி, சிலிதான், நாங்கள் பொலிவியர்கள் இல்லை. முதலாளித்துவ இங்கிலாந்துக்கார்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஜேம்ஸ்பாண்ட் படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், சிலியின் மதிப்பைக் குறைக்கும் வகையில் நாங்கள் நடந்து கொள்ளவில்லை என்றனர்.
ஆன்டபெகஸ்டா நகர மேயர் டேணியல் அடாரோ இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், பொலிவியாவை விட சிலி நவீனமான நாடாக இருப்பதால் இங்கு வந்து படம் பிடிக்கிறார்கள். இது சிலிக்கு பெருமையான விஷயம்தான். இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
சிலியாவுக்கும், பொலிவியாவுக்கும் இடையே 'Bond' உருவாவது போல மாத்தி எடுங்க பாஸ்!


Click it and Unblock the Notifications











