மீண்டு வந்த கேமரூன் டயஸ்

அவருக்கு நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், சக கலைஞர்களும் ஆறுதல் கூறி அரவணைத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
கேமரூன் டயஸின் தந்தை கடந்த வாரம் திடீரென மரணமடைந்தார். டயஸுக்கு இது பேரிடியாக அமைந்துவிட்டது. எப்போதும் அழகிய புன்னகையுடன் வலம் வரும் டயஸ் கடந்த ஒரு வாரகாலமாக தனிமையில் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'வாட் ஹாப்பன்ஸ் இன் வேகாஸ்' திரைப்படம் உலகெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் ஹாலிவுட் கலைஞர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
கேமரூனைப் பார்த்தவுடன் ஒவ்வொரு கலைஞரும், பத்திரிகையாளரும் எழுந்துவந்து அவரை அணைத்து தங்கள் அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
"என் அப்பா திடீரென மரணமடைந்ததும் நான் தனி மரமாகிவிட்டதைப் போலத்தான் கடந்த ஒரு வார காலமாக தவித்தேன். ஆனால் உங்களையெல்லாம் பார்த்த பிறகு, நீங்கள் சொன்ன ஆறுதலைக் கேட்ட பொழுதுதான் நான் எவ்வளவு பெரிய குடும்பத்தில் இருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போது நிம்மதியாக இருக்கிறது..." என்றார் கேமரூன் டயஸ்.
ஹாலிவுட்டோ, கோலிவுட்டோ கண்ணீரும் பாசமும் உணர்வுகளும் ஒன்றுதான்!


Click it and Unblock the Notifications











