மீண்டும் நடிக்க வரும் மடோனா

பாப் தேவதை மடோனா சில காலத்திற்கு முன்பு நடிக்கவும் செய்தார். எவிடா அதில் ஒன்று. 2002ம் ஆண்டு அவர் நடித்த ஸ்வெப்ட் அவேதான் கடைசிப் படம். அப்படம் விமர்சகர்களால் பெரும் வசவுக்கு ஆளானதால் நடிப்புக்கு குட்பை சொன்னார்.
தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். விரைவில் பிப்த் மற்றும் விஸ்ட் ஆகிய இரு படங்களை அவர் இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க விரும்புகிறார் மடோனா. அதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள படம்தான் காஸாபிளான்கா.
ஆஸ்கர் விருது பெற்ற காஸாபிளான்காவில், ஹம்ப்ரி போகர்ட்டும், இங்க்ரிட் பெர்க்மேனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படத்தின் கதையை இக்காலத்திற்கேற்றார் போல மாற்றவும் திட்டமிட்டுள்ளார் மடோனா.
கதையை ஈராக்கில் நடப்பது போல மாற்றவும் அவர் யோசித்து வருகிறாராம். ஆனால் இதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஈராக்கிற்குப் போய் படம் எடுப்பது சாத்தியமா என்கிறார்கள் விமர்சகர்கள்.
அதேசமயம், மிகப் பெரும் புகழ் பெற்ற காஸாபிளான்காவை ரீமேக் செய்ய இப்போது என்ன அவசியம். இதன் மூலம் ஒரிஜினல் படத்தின் பெயர்தான் கெடும் என்றும் அவர்கள் கடுப்பாக கூறுகிறார்களாம். ஆனால் அதுகுறித்து மடோனா கவலைப்படவில்லையாம்.
காஸாபிளான்காவில் இங்க்ரிட் நடித்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 20தான். ஆனால் மடோனாவோ 50 வயதை நெருங்கி விட்டார். இதன் காரணமாகவே தனக்கும் ஏற்றார் போல கதையை கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
காஸாபிளான்கா ரீமேக் குறித்து மடோனா தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அதுகுறித்த வேலைகளில் மடோனா மூழ்கியிருக்கிறார் என்ற தகவல் மட்டும் கசிந்துள்ளது.
கோலிவுட் ரீமேக் மோகம் ஹாலிவுட்டையும் தொட்டு விட்டதோ?


Click it and Unblock the Notifications











