நாய்க்கு 'டாக் ஷோ' காணிக்கை!

டாக் ஷோக்களின் தாய் என்று கூறப்படும் அளவுக்கு டாக் ஷோவை உலக அளவில் பிரபலப்படுத்தியவர் வின்பிரே. இவரது ஓப்ரா வின்பிரே ஷோவுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வின்பிரே.
வருகிற வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள தனது டாக் ஷோவை கடந்த மாதம் சிறுநீரக கோளாறால் மரணமடைந்த தனது செல்ல நாய் சோபிக்கு காணிக்கை ஆக்குவதாக அறிவித்துள்ளார் வின்பிரே.
அந்த ஷோவும் நாய்கள் சம்பந்தப்பட்டதுதான். வீடுகளில் நாய்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த புலனாய்வு ஷோவாக இது அமைந்துள்ளது. இந்த ஷோவைத்தான் தனது நாய்க்கு காணிக்கை ஆக்குகிறார் வின்பிரே.
சோபி குறித்து வின்பிரே கூறுகையில், என்னுடன் 13 ஆண்டு காலம் வாழ்ந்தாள் சோபி. எதையும் எதிர்பாராத அன்பைக் காட்டினாள். எனது வாழ்க்கையின் முக்கிய நபராக இருந்தாள். எனது உண்மையான அன்பாகவும் சோபி விளங்கினாள்.
இந்த ஷோ மூலம் சோபிக்கு நான் அஞ்சலி செலுத்தினாலும், உலகம் முழுவதும் தங்களது செல்ல நாய்களை நேசிப்போருக்கும் இந்த நிகழ்ச்சி காணிக்கையாகும்.
நாய்களை வளர்ப்போர் அவற்றின் அடிப்படை உரிமைகளையும் மதிக்க வேண்டும், மனிதர்களைப் போலவே நேசிக்க வேண்டும் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் வின்பிரே.
ஒரு 'டாக்' ஷோ, Dog ஷோ ஆகிறது!


Click it and Unblock the Notifications











