ஹாலிவுட்டை கலக்கும் ஷிபானி

ஹோ கயி ஹை மொஹபத் தும்சே என்ற பிரபலப் பாடல் மூலம் ஹிட் ஆனவர் ஷிபானி. பாடகி என்றாலும் கூட படு க்யூட்டாக இருக்கும் ஷிபானி, ஹீரோயின்களுக்கே உரிய, அதிலும் பாலிவுட் நாயகிகளுக்கே உரிய கலக்கல் கவர்ச்சியுடன் கலக்கிக் கொண்டிருப்பவர்.
தனது சில்வர் குரலால் பாலிவுட்டை பரபரப்பாக்கி வரும் ஷிபானி அடுத்து ஹாலிவுட்டுக்கும் குரல் பரப்புகிறார்.
சமீபத்தில்தான் பிளட் மணி என்கிற ஹாலிவுட் படத்துக்காக ஒரு பாடலை பாடி முடித்து விட்டுத் திரும்பியுள்ளார் ஷிபானி. இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டன் கேட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களை ஷிபானியே எழுதி, இசையமைத்துப் பாடி அஷ்டாவதானியாகியுள்ளார்.
ஹாலிவுட் அனுபவம் குறித்து ஷிபானி ஜில்லிடும் குரலில் கூறுகையில், விதம் விதமான நாடுகளுக்குப் போய் பணியாற்றுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், இசை ஆர்வம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
எனது ஹாலிவுட் அசைன்மென்ட் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பிளட் மணியின் தயாரிப்பாளர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். படத்தில் இந்தியக் குரல் இடம் பெற வேண்டும் என்று அவர் விரும்பியபோது நான் நினைவுக்கு வந்துள்ளேன். உடனே கூப்பிட்டார். நானும் ஏற்றுக் கொண்டேன் என்கிறார்.
பிளட் மணி, திரில்லர் படமாகும். படத்தில் அரசியலும் கலந்திருக்கிறதாம். பயங்கரவாதம் குறித்தும் படத்தில் அம்சங்கள் இடம் பெற்றுள்ளனவாம்.
வட அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தாலும், பாலிவுட் மசாலாவையும் ஆங்காங்கே விரவி, வித்தியாசமான டிஷ் ஆக்கியுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











