அமி ஒயின்ஹவுஸுக்கு 'எம்பிசீமா'

எம்பிசீமா என்பது நுரையீரலைத் தாக்கும் நோய். போதைப் பொருள் மற்றும் சிகரெட் பழக்கத்தால் வருவது இது. கிட்டத்தட்ட டிபி போலத் தான் இதுவும்.
சமீபத்தில்தான் அமிக்கு, எம்பிசீமா தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க நிலையில் இந்த நோய் தாக்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமி தரப்பு சற்று நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இருப்பினும், முன்பு போல பாட முடியாத நிலை ஏற்படும் என அமி அஞ்சுகிறாராம்.
இதை நிரூபிப்பது போல, அவருக்கு எம்பிசீமா இருப்பதை கண்டுபிடித்த டாக்டர் கீத் பிரவுஸ் கூற்றும் இருக்கிறது. அமிக்கு வந்துள்ள நோயால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முன்பு போல அவரால் பாட முடியாது. குறிப்பாக நீண்ட நேரம் பாடுவது, உச்சஸ்தாயியில் பாடுவது இயலாத காரியம் என்கிறார்.
மேலும், அமிக்கு வந்துள்ள நோய் குணமாகாது, அது இன்னும் மோசமடையவே செய்யும். இனிமேல் அவர் போதைப் பொருட்களை கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. மீறிப் போனால் அவரது உயிருக்கு வெகு விரைவில் ஆபத்து நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அமியின் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆனால் அமியின் செய்தித் தொடர்பாளரான டிரேசி மில்லரோ, அமிக்கு வந்துள்ள நோய், தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
வழக்கமாக எம்பிசீமா, 45 வயதுக்கு மேல்தான் வரும். ஆனால் 24 வயதே ஆகும் அமியிடம் உள்ள போதைப் பொருள் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் அவரை இப்போது சிக்கலில் கொண்டு வந்து விட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று வடக்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார் அமி.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதுதான் அவருக்கு எம்பிசீமா வந்திருப்பது தெரிய வந்தது.


Click it and Unblock the Notifications











