13 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை வசீகரித்த ஜாக்சன்

அது 1996ம் ஆண்டு. மும்பையே மெய் மறந்து கிடந்தது. காரணம், மைக்கேல் ஜாக்சனின் இசைக் காற்று அங்கு வீசியதே.
சிவ உத்யோக் சேனா என்ற அமைப்புதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பைத் தொடங்கியவர் வேறு யாருமல்ல, பால் தாக்கரேதான். 27 லட்சம் மராட்டியர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது.
இந்த அமைப்புதான் ஜாக்சன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அக்டோபர் 30ம் தேதி இதற்காக மும்பைக்கு வந்தார் ஜாக்சன்.
அவரை நடிகை சோனாலி பெந்த்ரே, மகாராஷ்டிர மாநில பாரம்பரிய சேலை அணிந்து விமான நிலையத்தில் வரவேற்றார். ஜாக்சனுக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் வரவேற்பு அளித்தார் பெந்த்ரே.
அதன் பின்னர் 20 கார்கள் புடை சூழ விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு டயோட்டா காரில் அழைத்துச் செல்லப்பட்டார் ஜாக்சன்.
வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்தபடி புன்முறுவலுடன் சென்றார் ஜாக்சன். ஆங்காங்கே காரை நிறுத்தி ரசிகர்களைப் பார்த்து கைகளை உயர்த்தியும், பறக்கும் முத்தங்களையும் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இந்தியத் தெருக்களில் நடந்து போய் மக்களையும் சிறுவர்களையும் சந்திக்க விரும்பிய மைக்கேல் ஜாக்ஸனைக்கு மகத்தான வரவேற்பும் அன்பும் பரிசாகக் கிடைத்தது. இந்தியக் குழந்தைகளுக்கு தன் பறக்கும் முத்தங்களைத் தந்தபடி, மக்கள் வெள்ளத்தில் மிதந்த ஜாக்ஸனுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்திய மண்ணை அன்று வசீகரித்த ஜாக்சன் அதன் பின்னர் இந்தியாவுக்கு வரவில்லை. முதலும் கடைசியுமாக ஜாக்சனை இந்தியா தரிசித்தது அன்றுதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை மைக்கேல் ஜாக்ஸனின் பாதிப்பு மிக மிக அதிகம். நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பலரும் ஏதாவது ஒரு விதத்தில் மைக்கேல் ஜாக்ஸனின் இசையின் பாதிப்பில் ஆட, இசையமைக்க, பாட முயன்று கொண்டிருந்தது ரசிகர்கள் அறிந்த வரலாறு.


Click it and Unblock the Notifications











