ரிச்சியைப் பிரிகிறார் மடோனா?

மடோனாவுக்கு வயது 49. அவரது கணவர் ரிச்சிக்கு வயது 39. இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு மணந்து கொண்டனர். ஆனால் சமீப காலமாக அவர்களது உறவு இனிமையாக இல்லை. இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள்.
ரிச்சியின் போக்கு மடோனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் மறுத்துப் பேசுகிறாராம் ரிச்சி. இதனால் அப்செட் ஆகியுள்ளாராம் மடோனா.
இதுதவிர ரிச்சியின் குடிப்பழக்கமும் மடோனாவை விரக்திக்குள்ளாக்கியுள்ளது. தங்களது குழந்தைகளான, தத்துப் பையன் டேவிட் பாண்டா (வயது 2), முதல் கணவரான கார்லோஸ் லியான் மூலம் பிறந்த லூர்துஸ் (11 வயது) மற்றும் ரிச்சிக்கும், மடோனாவுக்கும் பிறந்த ராக்கோ (7 வயது) ஆகியோருடன் ரிச்சி மிகவும் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார். இது மடோனாவுக்குப் பிடிக்கவில்லை.
குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை விட குடிக்குத்தான் ரிச்சி அதிக மரியாதை கொடுப்பதாக அலுத்துக் கொள்கிறார் மடோனா.
இந்த மனஸ்தாபத்தால் ரிச்சியுடன், மடோனா பேசுவதே இல்லை. ஒரே வீட்டிலேயே இருவரும் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். தான் உண்டு, தனது குழந்தைகள் உண்டு என்று இருக்கிறாராம் மடோனா. ரிச்சி அவர் பாட்டுக்கு குடியும், கும்மாளமுமாக இருக்கிறாராம்.
இந்த நிலையில் நியூயார்க்கின் சென்டிரல் பார்க் பகுதியில், 6000 சதுர அடி கொண்ட டூப்ளக்ஸ் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் மடோனா. அந்த வீட்டில அவர் நிரந்தரமாக குடியேறத் திட்டமிட்டுள்ளாராம். தனக்கும், குழந்தைகளுக்கும், வேலைக்காரர்களுக்கும் தங்குவதற்கு வசதியான முறையில் வீட்டை தற்போது விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறாராம்.
இந்த வேலைகளை முடித்து விட்டு நிரந்தரமாக நியூயார்க்குக்குக் குடியேறப் போகிறாராம் மடோனா.
கேன்ஸ் பட விழாவுக்கு இருவரும் ஜோடியாகவே வந்திருந்தனர். ஆனால் அவர்களது முகங்களில் தவழ்ந்த புன்னகை படு செயற்கையாக இருந்ததாக விழாவுக்கு வந்தவர்கள் முனுமுனுத்தனர். முன்பு போல இருவரும் இயல்பாக இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஐரோப்பாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் மடோனா. 10 நகரங்களில் மடோனாவின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதில் நான்காவது நிகழ்ச்சியாக சுவிட்சர்லாந்தின் டூபென்டார்ப் நகர நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு மடோனா வட அமெரிக்கா செல்கிறார். அங்கு 18 இசை நிகழ்ச்சிகளை அமெரிக்கா மற்றும் கனடாவில் நடத்தவுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் மடோனா இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும். எனவே அவரது நிகழ்ச்சியைக் காண ரசிகர்களிடையே பேரார்வம் காணப்படுகிறது.
ஜூரிச் நகரில் உள்ள ராணுவ தளத்திற்கு அருகே மடோனாவின் இசை நிகழ்ச்சி வருகிர ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக 47 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனைக்கு விடப்பட்டன. ஆனால் விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இதனால் டிக்கெட் கிடைக்காத மடோனா ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கூடுதல் டிக்கெட் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











