ஹாலிவுட் படத்துக்கு கோலிவுட்டில் எடிட்டிங்!
எதற்கெடுத்தாலும ஹாலிவுட் தரத்தில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றியிருக்கிறது டிஜிட்டல் மேஜிக் எனும் கோலிவுட் நிறுவனம்.
ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட ஒரு ஆங்கில படத்தின் எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு உள்பட முழுமையான தொழில்நுட்ப வேலைகளும், சென்னையில் உள்ள அருள்மூர்த்தியின் டிஜிட்டல் மேஜிக் ஸ்டூடியோவில் நடந்தது.
ஹாலிவுட் பட நிறுவனம் ஒன்று புதுமுகங்களை வைத்து, 'வேஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறது.
நடுக்காட்டில் தனியாக இருக்கும் ஒரு பழைய பங்களாவில் ஒரு பெண்ணும், அவளுக்கு உதவியாக வேலைக்கார பெண்ணும் வசித்து வருகிறார்கள். குரூர புத்தி கொண்ட அந்த பெண், வேலைக்கார பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறாள். வேலைக்கார பெண் ஆவியாகி, பழிவாங்குவதே கதை.
இந்தப் படத்தை ஹாலிவுட் டைரக்டர் காரி இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் நியூயார்க்கில் உள்ள ஒரு காட்டில் நடந்தது.
சென்னை டிஜிட்டல் மேஜிக் ஸ்டுடியோ:
இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்' முழுவதும் சென்னையில் உள்ள டிஜிட்டல் மேஜிக் ஸ்டூடியோவில் நடந்தது.
படத்தின் டி.ஐ, பிலிம் ஸ்கேனிங், பிலிம் ரிக்கார்டிங், எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும்இந்த ஸ்டுடியோவிலேயோ நடந்தது.
அருள்மூர்த்தி தலைமையிலான திரைப்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த பணிகளை செய்து முடித்தார்கள். 'ஹாலிவுட்' படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' வேலைகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
பகலில் படமாக்கப்பட்ட காட்சிகளை, இரவில் நடப்பது போல் மாற்றி அமைத்ததையும், அடர்ந்த காடு மற்றும் பேய் பிடித்த வீடு போன்ற சூழ்நிலைகளை படத்தில் உருவாக்கி காட்டியதையும் பார்த்து, ஹாலிவுட் பட குழுவினர் அருள்மூர்த்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
ஏற்கெனவே ஹாலிவுட் நிறுவனத்துக்காக அனிமேஷன் பட வேலைகளை அருள் மூர்த்தி செய்து கொடுத்தார்.
அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களை குறுகிய காலத்தில் கற்றுத் தரும் படிப்புகளையும் நடத்துகிறது இந்த டிஜிட்டல் மேஜிக் நிறுவனம்.


Click it and Unblock the Notifications











