Cannes 2024: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. திரையிடப்படும் இந்திய படங்கள்!
கேன்ஸ்: Cannes 2024 (கேன்ஸ் 2024): 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவானது மே 15ந் தேதியில் இருந்து இம்மாதம் 25ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகத்தில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இது ஒரு பெரிய கௌரவமாகவே கருதப்படும்.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்ற விழாவாக உள்ளது 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும், இவ்விழா நடைபெற்றுவருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடம்பரமான ஃபேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது.

கேன்ஸ் 2024: கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் தற்போது முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது. உலகளவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் நடிகை, நடிகர்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இவ்விழாவுக்கு வருகின்றனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு: இந்த ஆண்டும் கேன்ஸ் 2024 சிவப்பு கம்பளத்தை அலங்கரிக்க ஐஸ்வர்யா ராய் பச்சன், அதிதி ராவ் ஹைதாரி, சோபிதா துலிபாலா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இதில், பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்', ராதிகா ஆப்தே நடித்த 'சிஸ்டர் மிட்நைட்', ஷ்யாம் பெனகலின் மந்தன் என மொத்தம் 7 இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.
சிறப்பு உரை: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழாவில் #MeToo இயக்கம் குறித்து கிரேட்டா கெர்விக் பேசினார். #MeToo இயக்கத்தால் சொல்லமுடியாத பல விஷயம் வெளியில் வந்துள்ளது என்றார். மேலும், திரைப்படங்கள் மூலம், சமூகத்தில் சில விஷயத்தை மாற்ற முயற்சிப்பது மட்டுமில்லாமல், கணிசமான மாற்றத்தை நாம் தொடர வேண்டியது முக்கியம். இதனால், அனைத்தையும் சரியான திசையில் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து,77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நேரப்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கியது.


Click it and Unblock the Notifications











