தோர் பட நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.. கவனமா இருங்க என எச்சரிக்கை!
லண்டன்: தோர், பசிபிக் ரிம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்லாக கொரோனா வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது.
ஏழை - பணக்காரன் என்கிற பேதம் எல்லாம் தாண்டி பல கோடீஸ்வர பிரபலங்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகராக இத்ரிஸ் எல்பா தேர்வு செய்யப்படுவார் என்ற பேச்சுக்கள், அடிபட்டு வந்த நிலையில், தற்போது, அவருக்கு கொரோனா பரவியது ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்ரிஸ் எல்பா
பிரபல இங்கிலாந்து நடிகரான இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சற்று முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த, வீடியோ அறிவிப்பு ஒன்றை மிகவும் வருத்தத்துடன் நடிகர் இத்ரிஸ் எல்பா பதிவிட்டுள்ளார். மேலும், தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் இருங்க என்றும் கூறியுள்ளார்.

லேசா நினைக்காதீங்க
கொரோனா வைரஸ் நம்மை தாக்காது என்று லேசா நினைக்காதீங்க, முடிஞ்சவரை ஜாக்கிரதையா இருங்க, அடிக்கடி உங்கள் கைகளை கழுவிக் கொள்ளுங்கள், வெளியே சுற்றாமல், பாதுகாப்பான இடைவெளி விட்டு உங்களை பாதுகாத்துக் கொள்வது இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று என்றும் கூறியுள்ளார்.

பயப்படாதீங்க
கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை, அதனை அலட்சியப் படுத்தாமல் பாதுகாப்பாக இருந்தாலே அந்த கொடிய நோய் உங்களை தாக்காது. நான் எனக்கு கொடுக்கப்படும் மருத்து சேவைகள் பற்றியும், கொரோனாவில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பது குறித்தும், உங்களுக்கு அடிக்கடி அப்டேட் செய்கிறேன் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்கள்
ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உலகளவில் பிரபலங்களை பீதியடைய வைத்தது. டாம் ஹான்க்ஸை தொடர்ந்து, ஜேம்ஸ்பாண்ட் நடிகையான ஓல்கா குரிலென்காவும் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக இத்ரிஸ் எல்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

முடங்கிய திரையுலகம்
ஹாலிவுட் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக படப்பிடிப்புகள், திரைப்பட காட்சிகள், சீரியல் ஷூட்டிங் என முற்றிலும் நிறுத்திவைக்கப் பட்டு, மிகப்பெரிய பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு, பொருளாதாரம் அனைத்தையும் தாண்டி இந்த நேரத்தில் உயிரைக் காத்துக் கொள்வது தான் முக்கியம் என்ற அடிப்படையிலேயே அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











