ஓட்டலில் வாக்குவாதம்.. சண்டையை விலக்கச் சென்ற நடிகைக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதி!
மான்ஹாட்டன்: ஓட்டலில் நடந்த சண்டையை விலக்கச் சென்ற நடிகையையும் அவர் தோழியையும் கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்பென்சர் கிராமர். பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கெஸ்லி கிராமரின் மகள் இவர்.
பியூட்டிபுல் ஓஹியோ, டீசன்ட் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், ரிக் அண்ட் மோர்ட்டி, ராயல் பெய்ன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ் உட்பட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஒன்றும் இல்லை
இவர், தனது தோழியுடன் நியூயார்க், மான்ஹாட்டனில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு கடந்த 26 ஆம் தேதி சென்றார். அங்கு இரவு 11.30 மணி அளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞர் வந்தார். அந்த ஓட்டல் மூடப்படும் நேரம் அது. அந்த இளைஞர் தனக்கு எதையோ ஆர்டர் செய்து கேட்டார். ஓட்டல் மூடப்படும் நேரம், இப்போது ஒன்றும் இல்லை என்று ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கத்தியால் வெட்டினார்
இதனால் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் அதிகமாக வரவே, நடிகை ஸ்பென்சரும் அவர் தோழியும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அதைக் கேட்காத அவர், ஆத்திரமடைந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்பென்சர் மீது அந்த வாலிபர் கத்தியால் வெட்டினார்.

மருத்துவமனையில்
இதில், அவர் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் தோழியின் முதுகில் குத்திவிட்டு தப்பிவிட்டார். ரத்தம் கொட்டியதை அடுத்து ஸ்பென்சரும் அவர் தோழியும் அலறினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்பென்சர் கிராமருக்கு சின்ன காயம் தான் என்றாலும் அவர் தோழிக்கு முதுகில் கொஞ்சம் அதிக காயம் ஏற்பட்டிருந்தது.
அடையாளம் கண்டனர்
இதுபற்றி நடிகை ஸ்பென்சர் கிராமர் கூறும்போது, பயப்படும்படி இல்லை, குணமடைந்து வருகிறோம் என்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த ஓட்டலின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வைத்து சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், அவர் பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











