Chris Evans wedding: 26 வயது இளம் நடிகையை மணந்த கேப்டன் அமெரிக்கா.. அட்டன்டன்ஸ் போட்ட அவெஞ்சர்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கேப்டன் அமெரிக்கா மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவான்ஸ் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பென்டாஸ்டிக் ஃபோர் திரைப்படத்தின் மூலம் அப்பவே சூப்பர் ஹீரோ ஆனவர் நடிகர் கிறிஸ் எவான்ஸ். அதன் பின்னர் மார்வெல் தயாரிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் திரைப்படம் கிறிஸ் எவான்ஸுக்கு உலக அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது.

கேப்டன் அமெரிக்காவுக்கு கல்யாணம்: கேப்டன் அமெரிக்கா சீரிஸ் படங்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் வரிசை படங்களிலும் கேப்டன் அமெரிக்காவாக நடித்து கலக்கி இருந்தார் கிறிஸ் எவான்ஸ். கடந்த ஆண்டு தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தில் முரட்டு வில்லனாக நடித்திருந்தார். இந்த ஆண்டு கிறிஸ் எவான்ஸ் நடிப்பில் கோஸ்டட் எனும் படம் வெளியானது. மேலும், ரெட் ஒன் மற்றும் பிளைன் ஹஸ்ட்லர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
42 வயதாகும் கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் இதுவரை திருமணமே செய்து கொள்ளாத நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி ஆல்பா பபிஸ்டா எனும் இளம் ஹாலிவுட் நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ் எவான்ஸ் வீட்டிலேயே நடந்த இந்த திருமணத்தில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களான ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜெரிமி ரென்னர் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களான ஹாலிவுட் நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பொண்ணு யாரு தெரியுமா?: போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இளம் நடிகை ஆல்பா பபிஸ்டாவை கிறிஸ் எவான்ஸ் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் காதலை இருவரும் வெளிப்படுத்தி இருந்தனர். கூடிய விரைவிலேயே திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திருமணம் முடிந்து லிப் லாக் முத்தத்தை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உலகளவில் ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது.

16 வயதிலேயே மியாமி எனும் குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்த ஆல்பா பபிஸ்டா ஏகப்பட்ட டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











