ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் அடித்த அந்த அடி ஞாபகமிருக்கா.. பதிலடி கொடுத்த கிறிஸ் ராக்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றதை எல்லாம் மறக்க அடித்து விட்டது அவர் கொடுத்த அந்த அடி.
94வது ஆஸ்கர் விழாவை உலகமே பரபரப்பாக திரும்பிப் பார்க்க வைத்தது அந்த சம்பவம். நிகழ்ச்சி தொகுப்பாளரான கிறிஸ் ராக் பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி குறித்து கிண்டலாக பேசியதும், கடுப்பான வில் ஸ்மித் மேடையேறி கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வில் ஸ்மித்துக்கு கிறிஸ் ராக் பதிலடி கொடுத்துள்ளது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது
பேட் பாய்ஸ், மென் இன் பிளாக் உள்ளிட்ட பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த வில் ஸ்மித் வீனஸ் வில்லியம்ஸ், ஷெரினா வில்லியம்ஸ் சகோதரிகளை டென்னீஸ் வீராங்கனைகளாக ஆளாக்கிய அவரது அப்பாவின் பயோபிக் படமான கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்து முதன் முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் பெற்றார்.

பாராட்டுக்கு பதில் தண்டனை
முதன் முதலாக ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்துக்கு பாராட்டு கிடைக்க வேண்டிய நிலையில், அதற்கு பதிலாக அவரது கோபம் காரணமாக 10 ஆண்டுகள் ஆஸ்கர் நிகழ்ச்சிகளிலேயே பங்கேற்க கூடாது என அகாடமி தண்டனை கொடுக்கும் அளவுக்கு அவர் கொடுத்த அந்த அறை அப்படியே காட்சியை மாற்றி விட்டது.

மனைவி குறித்து கிண்டல்
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கட் ஸ்மித்தின் தலையில் அரிய வகை நோய் காரணமாக முடி இல்லாத நிலையில், அது குறித்து கிறிஸ் ராக் கிண்டலாக பேசவும், இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினா, உனக்கு அவ்வளவு தான் என எச்சரித்த வில் ஸ்மித், தொடர்ந்து கிறிஸ் ராக் பேச, திடீரென மேடை ஏறி அந்த சம்பவத்தை செய்திருந்தார்.

ஒரே அறை உலகளவில் டிரெண்டிங்
ஆஸ்கர் விருது விழாவையே பார்க்காத நாடுகள் கூட கிறிஸ் ராக்கை மேடை ஏறி வில் ஸ்மித் கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டதும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். உலகளவில் அந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி ஒட்டுமொத்த ஆஸ்கர் விருது விழாவையும் இருட்டடிப்பு செய்தது.

கிறிஸ் ராக் பதிலடி
கடந்த ஆண்டு ஆஸ்கர் மேடையில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த கிறிஸ் ராக் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, இன்னமும் அந்த அடி என் காதில் கொய்யுன்னு கேட்குது, அந்த வலி மனதை விட்டு அகலவில்லை என வில் ஸ்மித்தை ஆபாசமாக திட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் இப்படியொரு தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், இனிமேல் இது போன்று நடக்கக் கூடாது என்பதற்காக வரும் மார்ச் 13ம் தேதி காலை 5.30 மணிக்கு இந்திய நேரப்படி ஆரம்பிக்கும் ஆஸ்கர் விருது விழாவில் தனியாக ஒரு பாதுகாப்பு குழுவையே நியமித்துள்ளனர். இந்த முறை ஆஸ்கர் விருது விழாவில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் நாமினேஷன் பெற்றுள்ள நிலையில், இந்தியர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











