கொரோனா வைரஸ் இப்படி கொல்லுதே.. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தின் ரிலீஸ் தேதி, காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'இன்டர்ஸ்டெல்லர்', 'இன்செப்ஷன்', 'டார்க் நைட்', 'டன்கிர்க்' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன்.
இவர் இப்போது இயக்கியுள்ள படம், 'டெனட்'. ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டிபிக்கி, மைக்கேல் கெய்ன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு
இந்தி நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த நாளில் இருந்து, சினிமா ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பை படமான இதை, பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கிறார். கடந்த வருடம் மே மாதம் தொடங்கிய இதன் ஷூட்டிங், டென்மார்க், எசுத்தோனியா, இந்தியா, இத்தாலி, நார்வே உட்பட பல பகுதிகளில் நடந்துள்ளது.

லாக்டவுன்
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டிரைலர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கண்மூடித்தனமாகப் பரவியதால், பல நாடுகள் லாக்டவுனை பிறப்பித்துள்ளன.

தியேட்டர்கள்
இதனால் கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் கொரோனா பிரச்னை முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்று டெனட் படக்குழு நம்பியது.

முடிவுக்கு வரவில்லை
படத்தின் ரிலீஸ் தேதியை இந்த மாதம் 31 ஆம் தேதிக்கு மாற்றியது. பின்னர் கொரோனாவின் வேகம் பார்த்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். ஆனால் கொரோனா முடிவுக்கு வரவில்லை என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் டெனட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











