ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.. பிரபல காமெடி நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!
நியூயார்க்: பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் மரணமடைந்துள்ள செய்தியை அவர் மகன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர். லவ்வர்ஸ் அண்ட் த அதர் ஸ்டேரஞ்சர்ச், ஏர்போர்ட் 1975, நாஸ்டி ஹேபிட்ஸ், இன்டிபெண்டட், மை 5 வைவ்ஸ் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஹெர்குலஸ், மெர்ஸி, த கிங் ஆப் குயின்ஸ், த குட் வைஃப் உட்பட ஏராளமான டிவி.சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் மனைவி அன்னி மியரா. ஹாலிவுட்டில் ஒரே திருமணத்துடன் வாழ்க்கையை கழித்த நடிகராக இவர்தான் இருப்பார் போலிருக்கிறது. இந்த தம்பதிக்கு எமி ஸ்டில்லர் என்ற மகளும், பென் ஸ்டில்லர் என்ற மகனும் உள்ளனர். பென் ஸ்டில்லர் அப்பாவை போல காமெடி நடிகராக இருக்கிறார்.
இந்நிலையில், அன்னி மியாரா கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பகுதியில் வசித்த ஜெர்ரி ஸ்டில்லர் முதுமை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவர் மகன் பென் ஸ்டில்லர் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 92. அவர் எப்போது இறந்தார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

'என் தந்தை இறந்துவிட்டார். அவர் சிறந்த தந்தையாகவும் பேரக் குழந்தைகளுக்கு சிறந்த தாத்தாவாகவும் இருந்தார். என் அம்மா அன்னி மியாராவுக்கு அர்ப்பணிப்புள்ள கணவராக 62 வருடங்கள் இருந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











