பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கார்ல் ரீய்னர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கார்ல் ரீய்னர் காலமானார். அவருக்கு வயது 98.
ஹாலிவுட்டுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. மூத்த நடிகர், நடிகைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

சிலர் உடல் நிலை சரியில்லாமலும் சிலர் கொரோனாவுக்கும் பலியாகி உள்ளனர். இப்போது பிரபல மூத்த காமெடி நடிகர் கார்ல் ரீய்னர் உயிரிழந்துள்ளார்.
இவர், த ஆர்ட் ஆஃப் லவ், த காமிக், ஜெனரேசன், த ஜெர்க், ஹிஸ்டரி ஆப்த வேர்ல்ட்- பார்ட் 1, த மெஜஸ்டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். என்டர் த லாஹிங், த காமிட், வேர் இஸ் போப்பா, த மேன் வித் டூ பிரைன்ஸ் உட்பட சில படங்களை இயக்கியும் உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டாய் ஸ்டோரி 4 அனிமேஷன் படத்துக்காக, பின்னணி குரல் கொடுத்திருந்தார்.
ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர், கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் முதுமை காரணமாக தனது 98 வது வயதில் இயற்கை எய்தினார். கலிபோர்னியாவின் பிரேவரி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் இறந்ததாக அவரது உதவியாளர் ஜூடி தெரிவித்துள்ளார்.
இதை இவர் மகனும் இயக்குனருமான ராப் ரீய்னர் உறுதிப்படுத்தியுள்ளார். 'என் தந்தை காலமாகிவிட்டார். எனக்கு கலங்கரை விளக்கமாக இருந்தவர் அவர். அவரது மறைவால் வேதனையில் இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











