கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு சினிமா பிரபலம் பலி.. தொடரும் உயிரிழப்பால் திரையுலகம் அதிர்ச்சி
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல ஒளிப்பதிவாளர் மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனாவுக்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒளிப்பதிவு
இப்போது பிரபல ஒளிப்பதிவாளர் அலென் டாவியு (Allen Daviau) உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 77. இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் டிவி.சிரியல்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய, ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல், டிவிலைட் ஸோன்: த மூவி, த கலர் பர்பிள், எம்பயர் ஆப் த சன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்
த பாய் ஹூ டிராங் டூ மச், த ஸ்டீரிட்ஸ் ஆப் எல்.ஏ, அமேஸிங் ஸ்டோரிஸ் உட்பட பல டிவி தொடர்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்துவந்த அவர், முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் அவரைப் பாதித்தது. இதனால் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆஸ்கர் விருதுக்கு
சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதை அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவரது இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். உயிரிழந்த ஆலன், ஐந்து முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒருமுறை அந்த விருதை பெறவில்லை.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
மருத்துவமனையில் ஆலன் சிகிச்சை பெற்று வந்தபோது பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஆலனுக்கும் தனக்குமான நெருக்கம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஆலன் அற்புதமான கலைஞர். திறமையான மனிதர். அவரது கேமராவை போலவே, அவரது அன்பும் அரவணைப்பும் சக்தி மிக்கவை' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்கள்
கொரோனாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம், ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, ஸ்டார் வார்ஸ் நடிகர், ஆண்ட்ரூ ஜாக், பிரிட்டீஸ் காமெடி நடிகர் எட்டி லார்ஜ், நடிகையும் எழுத்தாளருமான பேட்ரிசியா போஸ்வொர்த் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஜாய் பெனடிக்ட்
கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் நடித்த நடிகை லீ ஃபியர்ரோ, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாய் பெனடிக்ட், நடிகை ஹிலாரி கீத் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இப்படி தொடர்ந்து உயிரிழந்து வருவது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











