பேட்மேனும் உண்டு; சூப்பர் கேர்ளும் உண்டு.. பட்டையை கிளப்பும் ஃப்ளாஷ் ட்ரெய்லர்
நியூயார்க்: பிரபல நிறுவனமான டிசி தயாரிக்கும் தி ஃப்ளாஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என ஆரூடம் கூறிவருகின்றனர்.
ஹாலிவுட்டில் டிசிக்கும் மார்வெலுக்கும்தான் போட்டி. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டுகளை இறக்கும் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்குள் பலமாக போட்டிப்போட்டுக்கொள்பவை. மேலும் இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் கடுமையாக மோதிக்கொள்வது வழக்கம். அதேசமயம் மார்வெல் தனக்கான இடத்தை பிடித்துவிட்டது எனவும், டிசி தத்தளித்துக்கொண்டிருக்கிறது எனவும் அவ்வப்போது பேச்சுக்கள் எழுவது உண்டு.

டிசியை கட்டமைக்கும் இயக்குநர்:
இதனால் டிசி நிறுவனம் மீண்டும் நிமிர்வதற்கான அத்தனை பணிகளையும் மும்முரமாக செய்துவருகின்றது. இந்தச் சூழலில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு டிசி நிறுவனத்தை மறு கட்டுமானம் செய்ய முடிவெடுத்து இயக்குநர் ஜேம்ஸ் கன் களத்தில் குதித்திருக்கிறார். ஜேம்ஸ் கன் உள்ளே வந்திருப்பதால் டிசி நிறுவனத்துக்கும், ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

ஃப்ளாஷ் ஏன் டிசிக்கு முக்கியமான திரைப்படம்
பல பிரச்னைகளை டிசி நிறுவனம் சந்தித்துவிட்டது, எனவே டிசி நிறுவனம் பெரிய சினிமாட்டிக் யுனிவர்ஸாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத்தான் ஜேம்ஸ் கன் தற்போது மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. டிசி நிறுவனத்துக்காக 2025ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டுவரைக்குமான ஒரு கதைக்களத்தையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

பட்டையை கிளப்பும் ஃப்ளாஷ் ட்ரெய்லர்
இப்படி டிசி நிறுவனத்துக்கு புதிய தொடக்கமாக இருக்கிறது ஃப்ளாஷ் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படு வேகமான நபராக கருதப்படும் ஃப்ளாஷ் கதாபாத்திரம் தனது தாய் உயிருடன் இருக்கும் காலத்திற்கு டைம் டிராவல் செய்து செல்வது குறிப்பிடத்தக்கது. அந்த டைமுக்கு சென்ற பிறகு அவர் செய்யும் சிறிய மாற்றம் ஒட்டுமொத்த உலகத்தையும் எப்படி மாற்றுகிறது என்பதை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது.

பேட்மேன் இருக்கிறாரா இல்லையா?
இந்தப் படத்தின் மீது இருக்கும் மற்றொரு எதிர்பார்ப்பு பேட்மேன் குறித்துதான். ட்ரெய்லர் மூலம் ஃப்ளாஷில் பேட்மேனும், சூப்பர் கேர்ளும் இருப்பது உறுதியாகியிருக்கிறது. அதாவது ஃப்ளாஷுக்கு பேட்மேனும், சூப்பர் கேர்ளும் உதவி செய்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கின்றனர். படமான திரையரங்குகளில் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











