முதல் முறை விண்வெளியில்.. டாம் க்ரூஸின் அந்த படத்தை இயக்கப் போறது யார் தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பேஸ் படத்தை ரியல் ஸ்பேஸிலேயே எடுக்க முடிவு செய்து விட்டார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.
மிஷன் இம்பாசிபிள் படங்களில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம்.
ரிஸ்க் எடுப்பதெல்லாம் டாம் க்ரூஸுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல அல்ல, அல்வா சாப்பிடுவது போல அவ்வளவு இஷ்டம்.

விபரீத சாகசங்கள்
மிஷன் இம்பாசிபிள் படங்களில் விமானத்துக்கு விமானம் தாவுவது, விமானத்தின் டயருக்கு பக்கத்தில் தொற்றிக் கொண்டு பயணம் செய்வது, ஹெலிகாப்டரை தலை குப்புற ஓட்டுவது, அதிலிருந்து அதிரடியாக குதிப்பது என உயிரை பணயம் வைத்து செய்யும் அத்தனை விபரீத சாகசங்களை சலிக்காமல் செய்யும் சகலகலா வல்லவன்.

புர்ஜ் கலிஃபா
164 மாடிகளை கொண்டு 829 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரிய ஸ்கைஸ்கிராப்பரான புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கே சென்று ஷூட்டிங் நடத்தி சாதித்த ஒரே ஹாலிவுட் பிரபலம் என்றால் அது டாம் க்ரூஸ் தான். மிஷன் இம்பாசிபிள் 5ம் பாகத்திற்காக இப்படியொரு ஆக்ஷன் காட்சியை செய்து அசத்தியிருப்பார்.

முதல்முறை விண்வெளியில்
இந்நிலையில், தற்போது தனது அடுத்த படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்த நடிகர் டாம் க்ரூஸ் சமீபத்தில் முதல்முறை விண்வெளிக்கே சென்று ஷூட்டிங் நடத்தப் போகும் தனது திட்டத்தை அறிவித்து உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதுவும் நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை செயலாற்ற உள்ளார்.

இயக்குநர் யார்
டாம் க்ரூஸின் இந்த எதிர்கால கனவை நினைவாக்கப் போகும் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. டாம் க்ரூஸின் Edge of Tomorrow படத்தை இயக்கிய (Doug Liman) டெளக் லிமன் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திற்கு தற்போது திரைக்கதை எழுதும் பணியை தொடங்கியுள்ளார்.

தள்ளிவைப்பு
1986ம் ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாப் கன் படத்தின் இரண்டாம் பாகத்தை டாப் கன்: மேவரிக் எனும் பெயரில் உருவாக்கி உள்ளார் டாம் க்ரூஸ். கொரோனா தொற்று பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த அந்த படத்தின் ரிலீஸ் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 23க்கு தள்ளிப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











