காரில் நடந்த திருட்டு முயற்சி.. தட்டிக்கேட்ட நடிகர் சுட்டுக்கொலை.. ரசிகர்கள் அதிரச்சி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற டிவி ஷோவால் பிரபலமடைந்தவர் ஜானி வாக்டர். அந்த ஷோவில் அவர் பிராண்டோ கார்பின் என்ற ரோலை ஏற்றிருந்தார். அது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜெனரல் ஹாஸ்பிட்டல் தவிர்த்து ஆர்மி வைவ்ஸ் உள்ளிட்ட சீரிஸ்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதாகும் அவர் கடந்த சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் ஜானி வாக்டர். சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது ஆர்வம் உடைய அவர் தொடர்ந்து நடிப்பதற்கு முயற்சிகள் செய்துவந்தார். அந்த முயற்சியின் பலனாக அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1963ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற டிவி ஷோ அமெரிக்காவில் ஒளிபரப்பானது. ஃபிராங்க் ஹர்ஸ்லி, டோரிஸ் ஹர்ஸ்லி ஆகிய இரண்டு பேரும் இணைந்து இந்த டிவி ஷோவை உருவாக்கினர்.

ஜெனரல் ஹாஸ்பிட்டல் செய்த சாதனை: இந்த ஷோவால் ஜானி வெகு பிரபலமடைந்தார். மேலும் இந்த டிவி ஷோ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அதிக காலம் ஓடிய டிவி ஷோ என்ற கின்னஸ் சாதனையையும் ஜெனரல் ஹாஸ்பிட்டல் செய்தது. மேலும் அமெரிக்க டிவி ஷோ வரலாற்றில் கைடிங் லைட் என்ற டிவி ஷோவுக்கு பிறகு அதிக காலம் ஓடிய டிவி ஷோ, உலகிலேயே அதிக காலம் ஓடிய மூன்றாவது டிவி ஷோ என்ற பல சாதனைகளை படைத்தது ஜெனரல் ஹாஸ்பிட்டல்.
பிராண்டோ கார்பின்: இந்த ஷோவில் பிராண்டோ கார்பின் என்ற ரோலை ஏற்றிருந்தார் ஜானி வாக்டர். அந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் ஜானி. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் ஆர்மி வைவ்ஸ் என்ற சீரிஸில் நடித்த அவர் USS Indiana Polis Men Of Courage, Super Cell உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருட்டு முயற்சி: சூழல் இப்படி இருக்க அவரும், அவரது நண்பர்களும் கடந்த சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் பார் ஒன்றுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேர் முகமூடி அணிந்துகொண்டு ஜானி வேக்டரின் காரிலிருந்து கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரை திருட முயன்றிருக்கின்ரனர். அதனை பாரில் இருந்தபடி ஜானியும், அவரது நண்பர்களும் கவனித்திருக்கின்றனர்.
சுட்டுக்கொலை: தனது காரில் திருட்டு முயற்சி நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜானி வாக்டர் உடனடியாக அருகே சென்று திருட்டு முயற்சியை தடுக்க பார்த்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். உடனடியாக ஜானி வாக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அவரது தாயாரும் உறுதி செய்திருக்கிறார். ஜானி வாக்டரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். மேலும் அந்த மூன்று பேரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











