ஹாலிவுட் நடிகர்களைத் தொடர்ந்து.. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நற்செய்தி பாடகர் உயிரிழப்பு
புளோரிடா: கொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த, பிரபல பாடகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க கடுமையாகப் போராடி வருகின்றன.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ், ஹாலிவுட் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. முன்னணி நடிகர், நடிகைகளையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இதில் சில நடிகர், நடிகைகள் உயிரிழந்துள்ளனர்.
இப்போது பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகரான டிராய் ஸ்னீட் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52. யூத் பார் கிறிஸ்ட், ஹையர், த ஸ்டரகில் இஸ் ஓவர் உட்பட பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள இவர், த பிரீச்சர்ஸ் ஒய்ஃப் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நற்செய்தி பாடல்களை பாடி இருக்கிறார். கிராமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவர். கொரோனா தாக்கியதை அடுத்து புளோரிடாவின் ஜாக்சன்விலே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் பில் கார்பன்டர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











