14 நாள் தனிமை சிகிச்சை...கொரோனாவால் அட்மிட் ஆன பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் சிறைக்கு ரிட்டர்ன்!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக மிடூ புகார் எழுந்தது.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, கார டெலவிங்னி உள்பட 80 பேர் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள்.

ஹாலிவுட் பரபரப்பு
இந்த பாலியல் புகார் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 2006 ஆம் வருடம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி என்பவரும், 2013 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத நடிகை ஒருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

வலிப்பு நோயால்
இதன் விசாரணை அமெரிக்காவின், நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது நடிகை அன்னபெல்லா சியோரா, சாட்சியம் அள்ளித்தார். அவர் கூறும்போது, வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, தான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதை போல உணர்ந்ததாக, கண்ணீருடன் கூறி இருந்தார். என் கைகளை தலைக்கு மேலே பிடித்து கொண்டு வெய்ன்ஸ்டீன் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அவர் சொன்னார்.

குற்றவாளி
நடிகைகளின் இந்த பாலியல் புகார்களை வெயின்ஸ்டீன் மறுத்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெயின்ஸ்டின் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. நீதிபதி கூறும்போது, 'இது புதிய நாள் என்று நம்புகிறேன். ஹார்வி வெயின்ஸ்டீன் அவர் செய்த பாலியல் குற்றங்களுக்காகப் பொறுப்பேற்கப்படுகிறார். அவர் குற்றவாளி' என்றார்.

சிறை தண்டனை
பின்னர் அவருக்கு 23 வருடம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் குணமாகியுள்ளார். அவர் சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











