மெட் காலா 2024.. நிகழ்ச்சியை தவிர்த்த பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே.. காரணம் இதுதான்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடா வருடம் மே மாதம் மெட் காலா எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் புதுமையான உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்துவரும் உடைதான் சில நாள்களுக்கு ஹாட் டாபிக்காக இருக்கும். அந்தவகையில் இந்த வருடமும் மெட் காலா நிகழ்ச்சி தொடங்கியது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே மாதம் மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள். ஒரே நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பிரபலங்கள் சங்கமிப்பதால் இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மெட் காலா 2024: வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்ச்சியானது 2020ஆம் ஆண்டு மட்டும் கோவிட் காரணமாக நடத்தப்படவில்லை. இந்த வருடத்திற்கான மெட் காலா நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. இதில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலியா பட் சப்யாசாஷி சேலையை அணிந்து வந்தது ரசிகர்களையும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களையும் பெரிதாக கவர்ந்தது.
பிற பிரபலங்கள்: அதேபோல், இஷா அம்பானி புடவை மற்றும் கவுன் வடிவிலான உடையை அணிந்து வந்திருந்தார். மேலும், இந்திய ஃபேஷன் துறையில் தொழிலதிபராக ஜொலித்துக்கொண்டிருக்கும் மோனா பட்டேலும் இதில் கலந்துகொண்டார். அவர் அணிந்திருந்த உடையை பார்த்த பிற பிரபலங்கள் வாயடைத்துப்போயினர். அவர் பட்டாம்பூச்சி வடிவிலான கவுன் ஒன்றை அணிந்திருந்தார்.
தவிர்த்த பிரபலங்கள்: இந்த வருட மெட் காலாவில் தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் கலந்துகொள்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் இருவரும் கடந்த வருட மெட் காலாவில் அணிந்திருந்த உடை பெரிதும் கவர்ந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் இருவரும் இந்த வருட மெட் காலாவில் கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பேருமே தங்களது படம் சம்பந்தமான பணிகளில் பிஸியாக இருப்பதால் இந்த வருட மெட் காலாவில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.
டிக்கெட் இவ்வளவா?: முன்னதாக கடந்த வருட மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 50,000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்திய மதிப்பில் 41 லட்சம் ரூபாய் ஆகும். இதன் காரணமாகவே சில பிரபலங்கள் கடந்த ஆண்டு நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் இவ்வருட மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 75,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 62 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











