சிக்கன் டிக்கா மசாலா.. காரம் கொஞ்சம் தூக்கலா.. ஆஷா போஸ்லே ஹோட்டலில் சாப்பிட்ட டாம் க்ரூஸ்!
மும்பை: ஆஷா போஸ்லேவின் ஹோட்டலில் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் சிக்கன் டிக்கா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் ஆஷா போஸ்லே. 1943 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாட்டுப்பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் ஆஷா போஸ்லே. வெளி நாடுகளிலும் ஏராளமான மேடை கச்சேரிகளில் பங்கேற்று பாடியுள்ளார் ஆஷா போஸ்லே.

கின்னஸ் சாதனை பாடகி ஆஷா போஸ்லே
பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே, பல பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். ஆஷா போஸ்லேவை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு, தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம விபூஷன் விருது ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.

பிர்மிங்காம் நகரில் இந்திய உணவகம்
பாடகியான ஆஷா போஸ்லே இங்கிலாந்தில் ரெஸ்டாரென்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஆஷாஸ் இன் பிர்மிங்காம் என்ற பெயரில் பிர்மிங்காம் நகரில் இந்திய உணவகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது ஹோட்டலில் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் சாப்பிட்டுள்ளார்.

இந்திய உணவுகளை சுவைத்த டாம் க்ரூஸ்
இதுதொடர்பாக பிர்மிங்காம் லைவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த சனிக்கிழமை மாலை நடிகர் டாம் க்ருஸ் சிக்கன் டிக்கா மசாலா உள்ளிட்ட இந்திய உணவுகளை சுவைத்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுடன் ஆஷா போஸ்லே ஹோட்டலுக்கு வந்த டாம் க்ரூஸ், சிக்கன் டிக்கா மசாலா ஆர்டர் செய்துள்ளார்.

உணவு சுவையாக இருந்தது
மேலும் கூடுதல் ஸ்பைஸியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் டாம் க்ரூஸ். இந்திய ஸ்பெஷல் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட டாம் க்ரூஸ், உணவு சுவையாக இருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஆஷா போஸ்லே, தனது டிவிட்டர் பக்கத்தில் அது குறித்து டிவிட்டியுள்ளார்.

மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்
அதன்படி, "திரு. டாம் குரூஸ் ஆஷாவின் (பர்மிங்காம்) ஹோட்டலில் வந்து சாப்பிட்டு தனது சிறந்த உணவு அனுபவத்தை அனுபவித்ததை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், விரைவில் அவர் மீண்டும் எங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

டாம் க்ரூஸ் போட்டோ
மேலும் டாம் க்ரூஸ் உணவகத்தை விட்டு வெளியேறும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் ஆஷா போஸ்லே. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான மிஷன்: இம்பாசிபிள் 7 படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்ததால், ஆஷாவின் ஹோட்டலில் இரண்டு மணி நேரம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

எந்த சலசலப்பையும் விரும்பவில்லை
ஆஷாஸ் இன் பொது மேலாளர் நவுமன் பாரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் "டாம் குரூஸ் வந்தபோது, அவர் எந்த சலசலப்பையும் விரும்பவில்லை என்றும் இந்த அட்மாஸ்ஃபியரின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாகவும் கூறினார். அவர் மற்ற விருந்தினர்களைப் போலவே ஒரு உணவையும் விரும்பினார்.

யாரும் எந்த வம்பும் செய்யவில்லை
மேலும் ஒரு உண்மையான இந்திய உணவை அனுபவிக்க விரும்பினார். ஹோட்டலில் சாப்பிட வந்த ஒரு சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டனர், ஆனால் அனைவரும் அல்ல. யாரும் எந்த வம்பும் செய்யவில்லை, இருப்பினும் அவர் மக்களை விட்டுச் சென்றபோது கொஞ்சம் க்ரேஸி ஆனார். சோஷியல் டிஸ்டன்ஸை பயன்படுத்தி ஹோட்டலுக்கு வெளியே போட்டோ எடுக்க ஒப்புக்கொண்டார்.

இரண்டு பிளேட் சிக்கன் டிக்கா மசாலா
மேலும் முதல் போட்டோவுக்கு முகமூடியை அணிந்திருந்தார். பின்னர் அவர் தனது முகமூடியைக் கழற்றி, 'இன்னொன்றை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். டாம் க்ருஸ் ஒரு சிக்கள் டிக்கா மசாலாவை ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் இரண்டாவது பிளேட் சிக்கன் டிக்கா மசாலாவை ஆர்டர் செய்த அவர் 'கூடுதல் மசாலாப் பொருட்களுடன்' வேண்டும் என்றார்.. இவ்வாறு ஆஷா போஸ்லேவின் மேனேஜர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











