பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் இன்டர்ஸ்டெல்லார்... 12 நாளில் 321 மில்லியன் டாலர் அறுவடை
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம். படம் வெளியான 12 நாட்களிலேயே அது 321.9 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள படம்தான் இன்டர்ஸ்டெல்லார். உலக அளவில் இப்போது இப்படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் 12 நாட்களில் இப்படம் 321.9 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளதாம்.

அதேசமயம், 2வது வார இறுதி நாளில் அமெரிக்காவில் இப்படத்தின் வசூல் பெருமளவில் சரிந்ததது. மாத்யூ மெக்கொன்னாகி, ஆன்னி ஹேதவே ஆகியோர் நடித்துள்ள இப்படம் அமெரிக்காவில் 29.2 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
இன்டர்ஸ்டெல்லார் உலக அளவில் 3561 தியேட்டர்களில்திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நவம்பர் 12ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. அங்கு சிறப்பாக அது ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 42 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
தென் கொரியாவில் இப்படத்திற்குக் கிடைத்துள்ள வசூல் 35.9 மில்லியன் டாலராகும். இங்கிலாந்தில் 19.3 மில்லியன் டாலர், ரஷ்யாவில் 16.8 மில்லியன் டாலர், பிரான்சில் 12.8 மில்லியன் டாலர், ஜெர்மனியில் 9.6 மில்லியன் டாலர் என இது வசூலித்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்புச் செலவு 165 மில்லியன் டாலராகும். அமெரிக்கா மற்றும் கனடாவில் சில இடைத் தேர்தல்கள் நடப்பதால் அங்கு குறைந்த அளவிலான தியேட்டர்களிலேயே இது திரையிடப்பட்டுள்ளது. அதேசமயம், உலக அளவில் இது பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.
இந்தியாவிலும் இன்டர்ஸ்டெல்லார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











