Karate Kid: Legends Review - ஜாக்கி சான் படம் பார்க்க ரெடியா?.. கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் முதல் விமர்சனம்!
சென்னை: சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட ஜாக்கி சான் படங்களை பார்த்து வளர்ந்த ரசிகர்கள் சமீப காலமாக அவரது படங்களை ரொம்பவே மிஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மித் 2 படமாக தி லெஜண்ட்ஸ் படம் வெளியானது. ஆனால், அந்த படம் கூட பெரிதாக இந்திய ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், உலகளவில் பல கோடி ரசிகர்களை கவர்ந்த கராத்தே கிட் படத்தின் அடுத்த பாகத்தின் மூலம் இந்திய ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்த இந்த வாரம் வருகிறார் ஜாக்கி சான்.
1980களில் இருந்தே கராத்தே கிட் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வருகின்றன. அதில், நடிகர் ஜாக்கி சான் மற்றும் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் உலகளவில் வசூல் வேட்டையும் நடத்தியது.

அதனை தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கராத்தே கிட் படத்தில் இணைந்துள்ளார் ஜாக்கி சான். கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் அதன் ப்ரீமியர் திரையிடப்பட்ட நிலையில், அதை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அளித்துள்ள விமர்சனத்தை முதல் விமர்சனமாக இங்கே பார்க்கலாம் வாங்க..
ஜாக்கி சானுக்கு குரல் கொடுத்த அஜய் தேவ்கன்: இந்தியாவிலும் தனது கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் படத்தை சமீபத்தில் மும்பைக்கு வந்து புரமோட் செய்தார் ஜாக்கி சான். இந்தி வெர்ஷனில் வெளியாகும் இந்த படத்தில் ஜாக்கி சானுக்கு அஜய் தேவ்கனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள லி ஃபாங் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கனின் மகன் யுக் குரல் கொடுத்துள்ளனர். அஜய் தேவ்கனின் மகன் இந்த படத்தின் மூலம் சினிமாவிலும் டப்பிங் கலைஞராக அறிமுகமாகிறார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
10க்கு 8 மார்க் கொடுக்கலாம்: ஜாக்கி சான், ரால்ஃப் மாச்சியோ, பென் வாங், ஜோஷ்வா ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் படத்தை ஜானதன் எண்ட்விஸ்ட்டில் அட்டகாசமாக இயக்கியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு கராத்தே கிட் ஃபிரான்சைஸ் படங்களில் பக்காவான படமாகவே இந்த படம் உருவாகியுள்ளது. 10க்கு 8 மார்க் கொடுக்கலாம். ஜாக்கி சான் மீண்டும் மிஸ்டர் ஹான் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார் என இந்த நெட்டிசன் விமர்சனம் கொடுத்துள்ளார்.
பென் வாங் பெரிய ஸ்டாராக வருவார்: கராத்தே கிட் வரிசை படங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் போது ரொம்பவே பிடித்திருந்தது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளைஞர் பென் வாங் இன்னும் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடிகராக மாறுவார் என தெரிகிறது. படத்தை தாராளமாக தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம் என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.
ஜாக்கி சானுக்கு வயசாகிடுச்சு: நம்ம ஊரில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் 70 வயதை தாண்டி நடித்து வருவதை போல ஜாக்கி சானும் தனது 71வது வயதில் வயதுக்கேத்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருப்பது போலத்தான் தெரிகிறது. ஜாக்கி சான் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதை பார்த்தாலே மனசுக்கு கஷ்டமாக உள்ளது. ஆனாலும், தனது நடிப்பால் மனுஷன் இப்பவும் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். இந்த படம் ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படம் போல பக்காவாக உள்ளது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











