பிக் பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் சுக்லா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த ஹாலிவுட் பிரபலம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல இந்தி டிவி நடிகர் சித்தார்த் சுக்லா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சித்தார்த் சுக்லாவின் மரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் இரங்கல் தெரிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
WWE சாம்பியனும் Fast and Furious 9 படத்தின் நடிகருமான ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

WWE சாம்பியன்
உலகளவில் பிரபலமான WWE சாம்பியன்கள் எல்லாம் சினிமாவுக்கு வரத் தொடங்கி விட்டனர். WWE விளையாட்டே ஒரு நாடகத் தனமான விளையாட்டுத் தான் என்று சொல்வோர்களும் உள்ளனர். இந்நிலையில், அவர்களால் எளிதில் சினிமாவை கற்றுக் கொள்ள முடிகிறது. ராக், படிஸ்டாவை தொடர்ந்து ஜான்சினாவும் சினிமா நடிகராக மாறி உள்ளார்.

எஃப் 9
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தில் ஹீரோ வின் டீசலுக்கு வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். கதைப்படி ஹீரோவும் இவரும் அண்ணன் தம்பிகள் வேறு. கதை ரொம்ப சுமாராக இருந்தாலும் வழக்கம் போல ஆக்ஷனில் படம் மிரட்டுகிறது.

சித்தார்த் சுக்லாவுக்கு இரங்கல்
பிக் பாஸ் சீசன் 13ன் டைட்டில் வின்னரும் பிரபல இந்தி டிவி நடிகருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக காலமானார். இந்தியளவில் ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், ஹாலிவுட் பிரபலமான ஜான் சினாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிரெண்டாகும் ஜான் சினா
இந்த தகவல் தெரிந்ததும் சித்தார்த் சுக்லாவின் ரசிகர்கள் #JohnCena என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றவரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான ஜான் சினா F9 படத்திற்கே எந்தவொரு விளம்பரத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பண்ணாத நிலையில், சித்தார்த் சுக்லாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் நடிகர் சித்தார்த் சுக்லாவின் புகழ் பரவியிருப்பதை கண்டு ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











