Joker 2 Teaser: மரணமாஸா இருக்கே ஜோக்கர் 2 டீசர்.. தமிழ் டப்பிங்கில் வேட்டையனுக்கு வேட்டு வைக்குமா?
சென்னை: டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா நடிப்பில் உருவாகி உள்ள ஜோக்கர் படத்தின் 2ம் பாகத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தி டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடிக்காத வரையில் பேட்மேன் தான் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வந்தார்.
ஆனால், ஹீத் லெட்ஜர் ஜோக்கர் கதாபாத்திரத்தின் முழு வில்லத்தனத்தையும் அந்த கேரக்டரில் உள்ள ஹீரோயிசத்தையும் வெளிப்படுத்திய நிலையில், அவர் மறைந்த பின்னரும் ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு உயிர் கிடைத்தது.

ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படமாகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கின் பீனிக்ஸுக்கு பெற்றுத் தந்த படமாகவும் மாறியது.
ஜோக்கர் 2: இந்நிலையில், இந்த ஆண்டு அந்த படத்தின் 2ம் பாகம் வெளியாக காத்திருக்கிறது. தற்போது ஜோக்கர் 2 படத்தின் அட்டகாசமான டீசர் தமிழ் உள்ளிட்ட உலக மொழிகளில் உருவாகி உள்ளது. ஜோக்கர் படத்தின் முதல் பாகமே தமிழில் வெளியாகாத நிலையில், 2ம் பாகம் தமிழில் வெளியாவதை அறிந்த ரசிகர்கள் முதல் பாகத்தையும் விரைவில் தமிழ் டப்பிங்கில் ஓடிடியில் ரிலீஸ் பண்ணுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜோக்கின் பீனிக்ஸ்: ரசுல் க்ரூ நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் படத்தில் வில்லனாக இளம் வயது நடிகர் ஜோக்கின் பீனிக்ஸ் நடித்திருப்பார். அப்போதிலிருந்தே ஹாலிவுட்டில் தனது வில்லத்தனத்தை காட்டி வந்த அவர் பல படங்களில் வில்லனாக நடித்து வந்தார். ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக அவர் நடித்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 2ம் பாகத்தில் அந்த அழும் சீன் மற்றும் கடைசியில் லேடி காகா வரையும் ஸ்மைலியில் பொருத்தமாக அவர் முகத்தை திருப்பும் காட்சிக்கே இந்த முறையும் ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கிவிடுவார் என்றே தெரிகிறது.

லேடி காகா: அமெரிக்காவின் சிறந்த பாடகியும் நடிகையுமான லேடி காகா இந்த படத்தில் ஹார்லி குயினாக ஜோக்கரின் காதலியாக நடித்துள்ளார். இருவரது காட்சிகளும் டீசரிலேயே பட்டையை கிளப்புகின்றன. நிச்சயம் தியேட்டரில் சரவெடி பட்டாசு கன்ஃபார்ம் என தெரிகிறது. அதிலும் நீ பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும் என சிறையில் அடைபட்டுக் கிடக்கும் ஜோக்கரை லேடி காகா தூண்டி விடும் இடமெல்லாம் தூள் கிளப்புது.
வேட்டையன் படத்துடன் மோதல்: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், ஜோக்கர் 2 திரைப்படமும் அதே அக்டோபர் மாதம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் வேட்டையன் படத்துக்கு வேட்டு வைக்கவில்லை என்றாலும், ஓவர்சீஸில் ஜோக்கர் 2 திரைப்படம் பெரிய தடையாக மாறுமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











