7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கணவர் கன்யே வெஸ்ட் உடன் இனியும் இணைந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு வந்த கிம் கர்தாஷியன், கணவருக்கு எதிராக விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல வழக்கறிஞர் லாரா வாஸரை கிம் கர்தாஷியன் ஒப்பந்தம் செய்த நிலையில், தற்போது விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கிம் கர்தாஷியன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிம் கர்தாஷியன்
சுமார் 180 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டு சர்வதேச சூப்பர் மாடலாக திகழ்கிறார் கிம் கர்தாஷியன். அண்மையில், அவரது அழகு சாதான நிறுவனமும், பல நூறு கோடிகளை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்து இருந்தது. ரியாலிட்டி ஷோ நடிகையாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் கவர்ந்தவர் கிம் கர்தாஷியன். அவருக்கு வயது 40.

அரசியல் ஆசை
மாடல் அழகி கிம் கர்தாஷியனின் கணவரும் 43 வயதான அமெரிக்காவின் ராப் இசை பாடகராவும் திகழும் கன்யே வெஸ்ட், கடந்த ஆண்டு, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, உலகளவில் கவனம் ஈர்த்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ள இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது மனைவி கிம் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், கன்யே தனக்கு பைபோலார் டிசார்டர் இருப்பதையும் வெளிப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது.

பிரம்மாண்ட திருமணம்
இத்தாலியில் கடந்த 2014ம் ஆண்டு பல கோடிகளை செலவழித்து இருவரும் பிரம்மாண்ட திருமணம் செய்து கொண்டனர். கன்யே - கிம் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் குழந்தை நார்த்துக்கு 7 வயது, மகன் செயின்ட்டுக்கு 5 வயது, மகள் சிக்காகோவிற்கு 3வயது ஆகப் போகிறது, கடைக்குட்டி மகன் சாமுக்கு 19 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

கணவருக்கு சந்தேகம்
கடந்த 2018ம் ஆண்டு ராப் இசை பாடகரான மீக் மில்லுடன் இணைந்து சிறைகளை சீரமைக்கும் பணியை கிம் மேற்கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக கன்யே வெஸ்ட் பல முறை கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், கர்தாஷியன் ஒவ்வொரு முறையும் அதை தவிர்த்து வந்த நிலையில், இனியும் கன்யேவுடன் இணைந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு கர்தாஷியன் வந்துள்ளார்.

விவாகரத்து செய்ய முடிவு
தனது மூத்த பெண் குழந்தையை கருவிலே அழிக்க சொன்னேன் என பகிரங்கமாக கன்யே சொன்னதில் இருந்தே, இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். கடந்த சில மாதங்களாகவே விவாகரத்துக்கான பணிகளை கிம் கர்தாஷியன் தொடங்கியதாகவும், புகழ்பெற்ற செலிபிரிட்டி வழக்கறிஞரான லாரா வாஸரை கிம் கர்தாஷியன் விவாகரத்து வழக்குக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

எல்லாம் முடிந்தது
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று கிம் கர்தாஷியன் தனது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகின. கிம் கர்தாஷியன் தரப்பும் அதை உறுதி செய்யவே, 2012ம் ஆண்டு முதல் காதலித்து வந்த பந்தம் 7 ஆண்டுகள் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

இருவரது பராமரிப்பில்
மேலும், தனது 4 குழந்தைகளையும் இருவருமே பராமரிக்க வேண்டும் என்கிற முனைப்புடனே இந்த விவாகரத்து வழக்கை கிம் கர்தாஷியன் அணுக போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் இணைந்து வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்களை சரி சமமாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











