இளவரசி டயானாவாக மாறிய கிறிஸ்டன் ஸ்டீவார்ட்.. உலகளவில் வைரலாகும் ‘ஸ்பென்சர்’ டிரைலர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் இங்கிலாந்து இளவரசி டயானாவின் பயோபிக்கில் நடித்துள்ள ஸ்பென்சர் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.
அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே உலக ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்த நிலையில், டிரைலர் அதை விட பலரையும் திகைப்பில் ஆழ்த்தி வருகிறது.
கார் விபத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த இளவரசி டயானாவின் தாக்கம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் இருப்பதன் காரணமாகவே ஸ்பென்சர் படத்திற்கும் உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

டயானா ஸ்பென்சர்
இங்கிலாந்து இளவரசி டயானா ஸ்பென்சரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் பேப்லோ லரைன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட் இளவரசி டயானாவாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

கிறிஸ்டன் ஸ்டீவார்ட்
ட்விலைட் சாகா படங்களில் நடித்து கலக்கிய பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்டர்வாட்டர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்நிலையில், இளவரசி டயானா பயோபிக்கில் அவரை போலவே நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு முதற்கொண்டு மொத்தமாக மாற்றி நடித்து அசத்தி இருக்கிறார்.

வைரலான ஃபர்ஸ்ட் லுக்
விலையுயர்ந்த திருமண கவுன் அணிந்து கொண்டு பின் பக்கமாக திரும்பி சோகமாக டயானா அழும் காட்சியை பிரதிபலிக்கும் ஸ்பென்சர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்பென்சர் டிரைலர்
ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து வெளியான டிரைலரில் இயக்குநர் பேப்லோவின் பிரம்மாண்ட இயக்கம் மற்றும் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட்டின் அசத்தல் நடிப்பு ரசிகர்கள் கண் முன் மீண்டும் டயானாவை உயிருடன் கொண்டு வந்தது போல இருப்பதாக பலரும் மெய் சிலிர்த்து வருகின்றனர்.

வெனீஸ் திரைப்பட விழாவில்
வரும் செப்டம்பர் 3ம் தேதி திரையுலகின் உயரிய விழாவாக கருதப்படும் வெனீஸ் திரைப்பட விழாவில் இந்த படம் முதல் முறையாக திரையிடப் படுகிறது. அடுத்ததாக டொரண்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் திரையிடப்படவிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளை இந்த படம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்
திரைப்பட விழாக்களில் திரையிடப்படவுள்ள இந்த ஸ்பென்சர் திரைப்படம் ரசிகர்களின் பார்வைக்காக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டயானா வாழ்வில் நடந்த பல வெளியே தெரியாத ரகசியங்கள் அம்பலமாகுமா? என்கிற கேள்வியையும் இந்த படத்தின் டிரைலர் எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











