HBD Michael Jackson - பாப் உலகில் முடிசூடா மன்னன்... மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள் இன்று
நியூயார்க்: Michael Jackson Birthday (மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள்) பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் 65ஆவது பிறந்தநாள் இன்று.
உலகம் முழுவதும் பாப் இசை பரந்து விரிந்திருக்கிறது. பலருக்கும் அதன் மேல் தீராத மோகம் இருக்கிறது. அப்படி பலருக்குள்ளும் பாப் மீதான மோக தீயை வளர்த்ததில் மைக்கேல் ஜாக்சனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோசப் வால்டர் இரும்பு ஆலையில் பணியாற்றினார். அவருக்கு பாப் இசை மீது தீராத ஆர்வம் இருந்தது. ஆனால் சாதிக்க கூடிய சூழ்நிலை அவருக்கு இல்லை.

பேண்டு குழு: இருந்தாலும் தனது சகோதரர்களுடன் இணைந்து பேண்டு வாத்திய குழுவை நிறுவி நடத்திவந்தார். அதன் மூலமாக தனது மகன்களுக்கு இசையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அப்படி இசையை கற்றுக்கொண்டவர்தான் மைக்கேல் ஜாக்சன். ஜோசப் வால்டருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். படிப்படியாக இசையை கற்றுக்கொண்டு தன்னுடைய ஆறாவது வயதில் பள்ளி அளவிலான போட்டியில் முதல் பரிசை பெற்றார் ஜாக்சன்.
பரிசு கொடுத்த உற்சாகம்: முதல் பரிசு பெற்ற உற்சாகத்தில் 1964ஆம் ஆண்டு தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற இசை குழுவில் இணைந்தார். அந்த குழுவில் இணைந்து தொடர்ந்து மேடைகளில் பாடி வந்தவர் தனது 14ஆவது வயதில் தனியாக பாட தொடங்கினார். தனியாக ஏறிய முதல் மேடையே மைக்கேல் ஜாக்சனுக்கு பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தொடர்ந்து தனியாக பாடுவதையே வழக்கமாக கொள்ள ஆரம்பித்தார்.
முதல் சாதனை: இதற்கிடையே மைக்கேல் ஜாக்சனும் அவரது சகோதரர்களும் இணைந்து நடத்திய ஜாக்சன் 5 குழு பெரும் சாதனை ஒன்றை படைத்தது. அதாவது இவர்களது பாடல் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் தொடர்ந்து நான்கு முறை இடம்பிடித்தது. ஒரு கருப்பின இசைக்குழு இப்படிப்பட்ட சாதனையை செய்தது இதுவே முதன்முறை. இதன் காரணமாக இவர்களது புகழ் மென்மேலும் பரவ தொடங்கியது.
டயானா ராஸ்: இந்தச் சூழலில் தனியாக பாட ஆரம்பித்த மைக்கேல் ஜாக்சன் வெகு விரைவிலேயே முன்னணி பாடகியாக இருந்த டயானா ராஜுடன் ஒரே மேடையில் புகழடைந்தார். அப்படியே மைக்கேல் ஜாக்சனின் நடனத்துக்கும், பாடலுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர்.
உலக புகழ்; இருந்தாலும் ஏக்கம்: தொடர்ந்து பல பாடல்களையும், ஆல்பங்களையும் வெளியிட்டுக்கொண்டே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். அப்படி அவர் வெளியிட்ட த்ரில்ல, பேட், டேஞ்சரஸ் ஆகிய ஆல்பங்கள் அவரை உலகப் புகழின் உச்சிக்கு கொண்டு போய் நிறுத்தியது. இருந்தாலும் மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு ஏக்கம் எப்போதும் தீராததாகவே இருந்தது. அது என்னவென்றால் தன்னுடைய சிறு வயது வாழ்க்கைதான். ஆம் அவருடைய சிறு வயதில் ரொம்பவே கஷ்டப்பட்டு சின்ன சின்ன விஷயங்களுக்கு ஏங்கியவர் மைக்கேல் ஜாக்சன்.

கருப்பு டூ வெள்ளை: அடிப்படையில் கருப்பினத்தவரான மைக்கேல் ஜாக்சன் அதனால் பல அவமானங்களை சந்தித்தார். இதனால் அவர் தனது கருப்பு தோலை அறுவை சிகிச்சை மூலம் வெள்ளையாக மாற்றிவிட்டார் என செய்திகள் பரவின. ஆனால் அதனை மறுத்த அவர் தன்னுடைய மூக்கின் அமைப்பை மட்டும்தான் மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். அதேபோல் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் உள்ளிட்ட சில சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
கடைசி காலம்: மைக்கேல் ஜாக்சன் முதலில் லிசா மேரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து ஆனது. லிசாவைத் தொடர்ந்து டெபிரோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதேசமயம் வாடகை தாய் மூலம்தான் அந்தக் குழந்தைகளை அவர் பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் பாப் இசை உலகிலிருந்து ஒதுங்க ஆரம்பித்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு அதிக மருந்து எடுத்துக்கொண்டார். அதன் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு தன்னுடைய சிறிய வயதில் கஷ்டங்களை அனுபவித்தாரோ அதே அளவு இள வயதில் புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் தன்னுடைய கிராஃப் பீக்கில் இருக்கும்போதே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் சந்தித்தார். இப்படி அத்தனையையும் கலந்து வாழ்ந்த மைக்கேல் ஜாக்சனை அவரது 65ஆவது பிறந்தநாளில் நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்


Click it and Unblock the Notifications











