Mission Impossible 8 Box Office: இந்தியாவிலேயே இத்தனை கோடி வசூலா?.. லாபம் பார்க்குமா மிஷன் இம்பாசிபிள் 8?
லாஸ் ஏஞ்சல்ஸ்: சுமார் 30 வருடங்களாக டாம் க்ரூஸ் ஓடிக் கொண்டிருந்ததற்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று தான் தெரிகிறது. மிஷன் இம்பாசிபிள் 8வது பாகம் தான் ஃபைனல் ரெக்கனிங் என டைட்டிலிலேயே கடைசி எனக்குறிப்பிட்டு 2 பாகங்களாக அந்த படத்தை டாம் க்ரூஸ் உலகளவில் உள்ள தனது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மே 17ம் தேதி வெளியான அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பாலிவுட் படங்கள் செய்யாத அளவுக்கு முதல் நாளில் அதிக வசூலை மிஷன் இம்பாசிபிள் 8 படம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்த்ததை விட அதிக வசூலை மிஷன் இம்பாசிபிள் படம் அள்ளியிருக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட், இந்தியாவில் செய்த வசூல் சாதனை, உலகளவில் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன? படம் லாபத்தை ஈட்ட எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என அனைத்து விவரங்களையும் தெளிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
இந்தியாவில் வசூல் வேட்டை: கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்து வெளியாகி இருக்கும் மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் முதல் நாளான மே 17ம் தேதி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16.5 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதில், அதிகபட்சமாக ஆங்கிலத்தில் வெளியான மிஷன் இம்பாசிபிள் 8 திரைப்படம் 11 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழில் வெறும் 35 லட்சம் தான் வசூல் செய்தது. 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 17.69 கோடியாக வசூல் அதிகரிக்க ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் 34.22 கோடி வசூலை இந்த படம் 2 நாட்களில் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான எந்தவொரு ஹாலிவுட் படமும் இந்தளவுக்கு வசூல் ஈட்டவில்லை. பல பாலிவுட் படங்களே இப்படியொரு வசூல் சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவர்சீஸ் லாபம்: 300 மில்லியன் டாலர் மதிப்பில் வெளியான மிஷன் இம்பசிபில் டெட் ரெக்கனிங் திரைப்படம் உலகளவில் அதிகப்படியாக 540 மில்லியன் டாலர் வசூல் செய்தது. 400 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் மிஷன் இம்பாசிபிள் 8 திரைப்படம் 800 மில்லியன் டாலர் வசூலை ஈட்டினால் தான் லாபகரமான படமாக மாறும் என்கின்றனர். இதுவரை வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களிலேயே மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் திரைப்படம் தான் அதிகபட்சமாக 790 மில்லியன் டாலர் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இதுவரை உலகின் 3 பெரிய ஓவர்சீஸ் மார்க்கெட்டுகளான இந்தியா, கொரியா மற்றும் ஜப்பானில் அதிகபட்சமாக 11.5 மில்லியன் டாலர்களை மட்டுமே மிஷன் இம்பாசிபிள் படம் வசூல் செய்துள்ளது.
அமெரிக்காவில் எப்போ ரிலீஸ்?: இந்தியா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் வெளியான மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் அமெரிக்காவில் வரும் மே 23ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மிகப்பெரியளவில் வசூல் வேட்டையை படம் நடத்தினால் தான் லாபத்தை அள்ளும் என்கின்றனர். கலவையான விமர்சனங்களும் இந்த மிஷன் இம்பாசிபில் ஃபைனல் ரெக்கனிங் படத்துக்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











